எழுப்புதல் என்பதன் உண்மை பொருள் என்ன?
2 திமோ 1: 1-3,6-12; மாற் 12: 18-27
இது எழுப்புதல் கூட்டங்களின் காலமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் எழுப்புதல் கூட்டங்கள், எழுப்புதல் செபங்கள் என்ற பெயரில் கரகோஷங்களும், கூச்சல்களும், சில வேளைகளில் காலக்கொடுமையான கூத்துக்களும் நடந்து கொண்டிருக்கின்றன... இந்த பின்னணியில் இன்றைய இறைவார்த்தையில் பவுலடிகளார் நம்மை உண்மை எழுப்புதலை குறித்து சிந்திக்க தூண்டுகிறார். அவர் பயன்படுத்தும் அழகான உவமையை பாருங்கள்... நான் உன் மீது கைகளை வைத்து செபித்தபோது இறைவன் உனக்குள் தந்த கொடைகளை "தூண்டி எழுப்பிட" உன்னை அழைக்கிறேன், என்று தீமோத்தேயுவிடம் கூறுகிறார்.
நாம் மனதில் கொள்ள வேண்டிய உவமை - எரிந்து முடிந்தாற்போல் இருக்கும் கங்குகளை பாருங்கள்... அனைத்தும் முடிந்துவிட்டது என்று சிந்திக்க தோன்றும் நிலை. ஆனால் அதை நாம் ஊதி தூண்டும் போது பறந்து பரவும் சாம்பலுக்கு அடியிலே சிறியதாய் இன்னும் கண்சிமிட்டிகொண்டிருக்கும் அந்த நெருப்பு பக்கென்று பற்றி எறியும் அந்த நேரம் வரும்! அது தான் எதிர்நோக்கு! அதை தூண்டி எழுப்புவது நமது நம்பிக்கை... மாறாத மறையாத நம்பிக்கை.
கிறிஸ்து இறந்த போது அனைத்தும் முடிந்துவிட்டதாய் தான் தோன்றியது. சீடர்களும், அப்போஸ்தலர்களும், பெண்டீரும் மரியன்னையும், இன்னும் அமைதியாய் தவித்திருந்தபோது... தூண்டிவிடப்பட்ட நெருப்பாய் கனன்றெழுந்த உயிர்த்த கிறிஸ்துவின் எதிர்நோக்கு இதுவே!
நம் வாழ்விலும், துன்பங்களும், தோல்விகளும், தொய்வுகளும், திணறல்களும், அடுத்தடுத்து வந்தாலும், நம் உள்ளத்திலே இறைவனின் கொடை இன்னும் அணையா கங்குகளாய் இருப்பதை நாம் உணர்வோம்! ஆற்றலின் ஆவி, அன்பின் ஆவி, தன்னடக்கத்தின் ஆவி, வாழ்வோரின் இறைவன் நமக்கு தந்துள்ள கொடைகளை நாம் உணராவிட்டால் இறைவனை அறியாதவர்களாய், இறைவார்த்தை புரியாதவர்களாய், குறைகூறுவதிலும், புலம்புவதிலும், தேவையற்ற சிந்தனைகளிலும், அன்பற்ற உறவுகளிலும் நமது வாழ்வை வீணடித்துவிடுவோம்!
இறைவனின் கொடைகளை உணர்வோம், நம் உள்ளத்தில் அவற்றை தூண்டி எழுப்புவோம்... நமது நம்பிக்கை நமக்கு எதிர்நோக்கு தரும்!
No comments:
Post a Comment