Tuesday, August 14, 2018

மரியாளின் விண்ணேற்பு: எதிர்நோக்கின் சின்னம்

ஆகஸ்ட் 15, 2018: மரியன்னையின்  விண்ணேற்பு பெருவிழா 

தி.ப 11:19, 12:16-20; 1 கொரி 15: 20-26; லூக் 1: 39-56 

என்னில் நம்பிக்கை கொள்வோர் இறப்பினும் வாழ்வர், என்று கூறிய கிறிஸ்துவின் உயிர்ப்பின் மகிமை நம் அனைவருக்குமே எதிர்நோக்காய் அளிக்கப்பட்டிருக்கிறது. அவரது இறப்பிலும் உயிர்ப்பிலும் நமது வாழ்வு நிலைவாழ்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த நிலைவாழ்வு, அந்த எதிர்நோக்கின் இலக்கு, எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நமக்கு புரிய வைக்க இறைவனால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மறைபொருளே மரியன்னையின் விண்ணேற்பாகும்! 

சில கத்தோலிக்கரல்லாத சகோதர சகோதரிகள், இது தவறானது, கிறிஸ்துவுக்கு இணையாக மரியாளை உயர்த்தும் செயலிது என்றெல்லாம் உளறிக்கொட்டும் போது கத்தோலிக்கர்களாகிய நாம் இதை தெளிவாய் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மரியன்னை இறந்தார் ஆனால் அவரது கல்லறை எங்கும் இல்லை என்று தொடக்க கால திருச்சபை முதலே தெளிவாய் உணர்ந்துவந்தனர் கிறிஸ்தவர்கள்! ஏன் அவரது கல்லறை இல்லை என்று கேட்டபோது தான் அவர்களது நம்பிக்கையின் அனுபவம் பகிரப்பட்டது!

கிறிஸ்துவால் மீட்கப்படுவோர் நிலைவாழ்வு பெறுகிறார்கள் என்பதை தான் நமது எதிர்நோக்கு என்று நாம் முழுமையாய் நம்புகிறோம்... இந்த எதிர்நோக்கின் அடையாளமாய், மனிதர்களிடையே தனிப்பேறு பெற்றவளாய், இறைமகனை உலகிற்கு தந்தவளாய் இருக்கும் மரியன்னை இறைவனால் உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதே அந்த நம்பிக்கையின் அனுபவம்! இங்கு விண்ணேற்புக்கும், விண்ணேற்றத்திற்கும் நடுவே உள்ள வேறுபாட்டை நாம் உணரவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். 

இறைமகன் கிறிஸ்து இறந்து உயிர்த்து விண்ணேறி தன் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். மரியன்னையோ இறைத்தந்தையின் பேரன்பிற்குரிய மகளாக, தூய ஆவியின் இணையற்ற கருவியாக, இறைமகனின் அன்னையும் முதல் சீடத்தியுமாக விண்ணேற்கப்பட்டார், எடுத்துக்கொள்ளப்பட்டார், கொண்டுசெல்லப்பட்டார். இது இறைவனால் அவருக்கு தரப்பட்ட தனிப்பட்டதொரு கொடையாகும்... இதனாலேயே  இன்றைய நற்செய்தி இறைபுகழுரைக்கும் நற்செய்தியாக, அன்னைக்கு இறைவன் செய்த பெரும்காரியங்களை நினைவுகூரும் நற்செய்தியாக தேர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. 

நாமும் அன்னையின் கீழ்படிதலையும், இறைசித்ததை மட்டும் செய்யும் புனிதமான வாழ்வையும் கொண்டிருந்தோமெனில், நமக்கும் இதே கொடை எதிர்நோக்காய் காத்திருக்கிறது என்பதை நமக்கு விளக்கும்  திருவிழா இது. அன்னையின் பிள்ளைகளாய் மகிழ்வோம், அவள் வாழ்விலிருந்து பாடங்கற்போம், இறைவனின் மகிமையை முழுதாய் காண்போம்!

2 comments:

tomssdb said...

Thank you saami

chris said...

Hai Tom... how are you? Happy Feast! thanks for the feedback!