Tuesday, August 7, 2018

எஞ்சியோரும், மற்றோரும்!

ஆகஸ்ட் 8, 2018: எரே 31: 1-7; மத் 15: 21-28


நான் உங்கள் கடவுளாய் இருப்பேன், நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள், என்று தன் மக்களோடு தான் செய்த உடன்படிக்கையை இறைவன் என்றுமே மறந்ததில்லை. மக்கள் எத்தனை முறை தவறுகள் செய்து அவரை விட்டு விலகினாலும், அவரோ அம்மக்களை திரும்ப அழைத்து அணைத்த வண்ணமே இருக்கிறார். இதையே இன்று எரேமியாவும் நமக்கு எடுத்து சொல்கிறார். ஆனால் இறுதியில் இறைவனின் நன்மை தனத்தை அனுபவித்து மகிழ இருப்பவர்கள் யார் என்று இறைவார்த்தை நமக்கு கூறும்போது, எஞ்சியோரும் மற்றோருமே இறுதியாய் மகிழ்வார்கள் என்று நம்மை எச்சரிக்கிறது! 

எஞ்சியோர் என்பவர்கள் இந்த உலகமே ஒரு வழியில் செல்ல, தாங்கள் மட்டும் நிதானித்து சரி எது பிழை எது, இறைவனுக்கு ஏற்றது எது ஏற்பில்லாதது எது, என்று சிந்தித்து முடிவெடுத்து தங்களுக்கு அளிக்கப்பட்ட வழியிலிருந்து தவறாமல் இறுதியாய் எஞ்சி நிற்பவர்களாவர்.   

மற்றோர் என்பவர்கள் பொதுவாக யாராலும் முக்கியத்துவம் தரப்படாது, தாங்களே இறைவனுக்கு உரியவர்கள் என்று தங்களையே உயர்திக்கொள்ளும் கூட்டத்திலிருந்து மாறுபட்டு, கடவுளையே தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோல் மார்தட்டி திரியும் மூளையற்ற மனிதர்களிடமிருந்து தனித்து விடுபட்ட எளிமையான மக்கள்... இவர்களின் எளிமையில் இறைவனை மட்டுமே நம்பும் குணத்தை பெற்றவர்கள், இறைவன் முன் தாங்கள் ஒன்றுமில்லை என்பதை உண்மையில் உணர்ந்து நம்புபவர்கள், உண்மையையம், அன்பையும் இறைவனின் இரக்கத்தையும் மட்டுமே முதன்மைபடுத்தி வாழ்பவர்கள். 

இந்த எஞ்சியோரும் மற்றோரும் மட்டுமே இறுதியில் இறைவனின் உடன்படிக்கைக்கு உரியவர்கள் ஆவார்கள் என்று விளக்கும் இன்றைய வாசகங்கள் நமக்கு தரும் பாடம் ஒன்றே: உலகத்தின் போக்கின் படி ஒழுகாதீர்கள், மாறாக கிறிஸ்துவில் மாற்றம் பெற்று புது படைப்பாகுங்கள்! 

No comments: