Wednesday, August 8, 2018

உடன்படிக்கைக்கேற்ற உள்ளமொன்று!

ஆகஸ்ட் 9, 2018: எரே 31: 31-34; மத் 16: 13-23



தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று உடன்படிக்கையை குறித்து சிந்திக்க நம்மை அழைக்கிறது இறைவார்த்தை. உடன்படிக்கை என்பது அடிப்படையிலே ஒரு உறவு! நமக்கும் நம் இறைவனாம் ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு - இந்த உறவின் ஆழம் எதனால் அறியப்படுகிறது தெரியுமா? இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ள இருத்தரப்பினரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு ஆழமாய் அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே! இறைவன் நம்மை முற்றிலும் அறிவார் என்பது நாம் அறிந்ததே... ஆனால் அவரை குறித்த நமது அறிவு, தெளிவு, உணர்வு, எப்படியுள்ளது என்பதே இங்கு கேள்வி! 

'இதோ, இறைவனை தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஒருவர் மற்றவரை பார்த்து சொல்லவேண்டிய அவசியம் இல்லாத நாள் ஒன்று வரும், ஏனெனில் ஒவ்வொருவரும் இறைவனை ஆழமாய் அறிந்து உணர்ந்திருப்பர் என்று எரேமியா கூறிய நாள் வந்தேவிட்டது... இயேசு பேதுருவை பார்த்து 'நீ பேறுபெற்றவன் ஏனெனில் இறைமகனை குறித்த இந்த அறிவு இறைவன் உனக்கு தந்ததே' என்று பாராட்டுவதை நாம் காண்கின்றோம்! ஆம், இறைவனே தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்... நாம் பேறுபெற்றவர்களே!

இறைவன் தன்னையே நமக்கு இவ்வாறு வெளிப்படுத்தினாலும், நாம் வெகு விரைவில் அதை மறந்துவிடும் மக்களாய் இருப்பதனால் பல நேரங்களில் இறைவனோடு நமக்குள்ள உறவை நாம் ஓரந்தள்ளிவிடுகிறோம். கடவுளுக்கும் நமக்கும் எந்த ஒட்டோ உறவோ இல்லாதது போல் நடந்து கொள்கிறோம். இந்த மறக்கும் மனம், இந்த ஒவ்வாத உள்ளமே நம்மை நமது உடன்படிக்கையை விட்டு விலக செய்கிறது, ஆனால் இறைவனோ மறப்பதும் இல்லை, நம்மை விட்டு விலகுவதுமில்லை. 

இதோ இன்றும் நமக்கு ஒரு உறுதியளிக்கிறார்... 'உங்களுக்கு இந்த உடன்படிக்கைக்கேற்ற உள்ளமொன்று தருவேன்... பெற்றுக்கொள்ளுங்கள், மனம் மாறுங்கள், என்னிடம் திரும்பி வாருங்கள், எத்தனை தொலைவு நீங்கள் சென்றிருந்தாலும் என்னை விட்டு விலகமுடியாது ஏனெனில், நான் உங்களை விட்டு விலகுவதில்லையே!' என்று நம்மை அன்போடு அழைக்கிறார்... அவரது மக்களாய், அவரது மந்தையை சேர்ந்தவர்களாய், அவரைப்போன்றே அன்பின் உள்ளம் பெற்றவர்களாய், நமது உடன்படிக்கையின் உறவிற்கு திரும்புவோம், புத்துயிர் பெறுவோம். 

No comments: