Sunday, September 30, 2018

வாழ்வின் பொருள் புரிகிறதா?

அக்டோபர் 1: குழந்தையேசுவின் புனித தெரேசா - நினைவு  

யோபு 1: 6-22; லூக் 9: 46-50

இந்த உலகிற்கு நாம் என்ன கொண்டுவந்தோம், இங்கிருந்து எதை கொண்டுச்செல்ல போகிறோம்? இறைவனிடமிருந்து வந்தோம், அவரிடமே திரும்பி செல்வோம்... ஆனால் வாழும்போது மட்டும் அனைத்தும் நம்முடையது போலவே எண்ணி வாழ்வது ஏன்... என்ற ஆழமான கேள்வியொன்றை எழுப்புகிறது இன்றைய இறைவார்த்தை. பிறப்பும் நாம் கேட்டு வருவதில்லை, இறப்பும் நாம் நிர்ணயித்து நிகழ்வதில்லை, இடைப்பட்ட காலத்தில் மட்டும் அனைத்தும் நமது விருப்பு வெறுப்பின் படியே நடக்க வேண்டும் என்று சிந்தித்தால் நம்மைவிட அதிக மடமையுள்ளவர்கள் யாராவது இருக்க முடியுமா? 

முதல் வாசகத்தில் வரும் யோபுவும் சரி நற்செய்தியில் பேசும் கிறிஸ்துவும் சரி, இதையே நமக்கு நினைவுறுத்துகிறார்கள் - விருப்பு வெறுப்பு, பழி பொறாமை, போட்டி பகை, பெயர் புகழ் என்று இல்லாத ஒன்றை மனதில் வைத்து கொண்டு, இருக்கும் வாழ்க்கையை வீணடிக்கும் மூடத்தனத்தை மனிதர்கள் மட்டுமே செய்ய கூடும் என்பதை காலமும் நமக்கு தொடர்ந்து உறுதிசெய்துக்கொண்டே இருக்கிறது.

இன்று நாம் நினைவுகூரும் குழந்தையேசுவின் தெரேசா எனப்படும் லிசியே நகரத்து தெரேசம்மாள் தனது வாழ்வில் விட்டுச்சென்ற பாடமும் இதுவே. 24 வயதிலேயே இறந்த அவர் தன் வாழ்க்கை முழுவதையும் தியாகத்திலும், உடல் வருத்திய நோயிலும் செலவிட்டாலும், இறைவனின் சித்தமேற்கும் பக்குவத்தாலும், அவர் திருவுளத்திற்கு அடிப்பணியும் முடிவினாலும் அனைத்தையும் இறைவனின் மகிமைக்காக மட்டும் செய்யும் மனம் கொண்டவராய் வாழ்ந்தார். 'பெரும் செயல்களை செய்வதில் அல்ல, இறைவன் வகுக்கும் செயல்களை பெரும் அன்போடு செய்வதிலே தான் புனிதம் இருக்கிறது' என்று கற்பிக்கும் அவரை போன்றே, இறைவனின் திருவுளத்திற்கும், அவரது மகிமைக்கும் நம்மையே சரணாக்குவோம், முழுமை காண்போம். 

No comments: