Monday, October 1, 2018

உடனிருக்கும் இறைவன்

கண்டுகொள்வோம் கொண்டாடுவோம்

அக்டோபர் 2: யோபு 3:1-3,11-17,20-23; மத் 18:1-5,10

காவல் தூதர்களின் நினைவு என்பது இறைவனின் உடனிருப்பை காண, உணர, கொண்டாட ஒரு அழைப்பாகும். நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நம்மை இறைவன் காண்கிறார், காக்கிறார், கரம் பிடித்து வழிநடத்துகிறார். நம் இறைவன் இந்த உலகம் முடியும் மட்டும் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கை விடுவதுமில்லை என்று நமக்கு வாக்களித்த இறைவன், உடனிருக்கும் இறைவன், தொடர்ந்து வரும் இறைவன். 

நமது கத்தோலிக்க பாரம்பரியத்தில் நமக்கு கற்று தரப்படும் பாடங்களில் முதலானவைகளில் ஒன்று நமது காவல் தூதர்களை பற்றிய நம்பிக்கையாகும். தனிப்பட்ட முறையில் இது குறித்து நான் கேட்டபோதெல்லாம் எனக்குள்ளாக ஒரு குழந்தையை போன்ற மனநிலை உருவாவதை நான் உணர்ந்திருக்கிறேன். உண்மை தான்... இந்த குழந்தையின் மனநிலை நம்மில் இல்லையென்றால், எப்போதும் உடன் இருக்கும் ஒருவரை தொல்லையாக, தொந்தரவாக, தடையாக தான் நாம் பாப்போம்! ஆனால் ஒரு குழந்தையாய் மாறிவிடும் போது அந்த உடனிருப்பிற்காக ஏங்குவோம், அந்த உடனிருப்பை முழுவதுமாக உணர்ந்து ஏற்றுக்கொள்வோம். இறைவனோடு நமக்குள்ள உறவும் இதை போன்றதே!

முதல் வாசகத்தில் யோபு தன் துயர் கண்டு வருந்தி புலம்புவதை நாம் கேட்கின்றோம்... ஆனால் வெகு விரைவில், தன் இறைவன் தன்னை கை விட்டுவிடவில்லை, தன்னிடமிருந்து வெகு தொலைவில் அவரில்லை, தன்னருகே தருணம் தப்பாமல் தன்னோடே இருந்திருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொள்வார். உடனிருக்கும் இறைவனை நாம் உடனே உணர்வதில்லை, நேரம் செல்லச்செல்லவே உணருகின்றோம். நம்மை சுற்றி நிகழ்வுகள் நடக்க நடக்க உடனிருக்கும் இறைவன் நமக்கு வெளிப்படுகின்றார். நம்மோடு உள்ள இறைவன் ஒவ்வொருவரோடும் இருக்கின்றார் என்பதையும் நாம் உணர வேண்டும் என்று இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது. யாரையும் எளிதில் எதற்காகவும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறார்.

நம் ஒவ்வொருவரோடும் உடனிருக்கிறார் இறைவன்! இந்த உடனிருக்கும் இறைவனையே நாம் இன்று சிறப்பிக்கின்றோம். அவரை கண்டுகொள்ளவும், கொண்டாடவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்... நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும், அவரை கண்டுகொள்வோம், கொண்டாடுவோம்!

No comments: