Wednesday, October 17, 2018

இறையரசின் நற்செய்தியாளர்களாவோம்

அக்டோபர் 18, 2018: நற்செய்தியாளர் புனித லூக்கா - விழா 

2 தீமோத்தேயு 4: 10-17ஆ; லூக்கா 10:1-9


இன்று புனித லூக்காவின் திருவிழாவை கொண்டாடுகின்றோம்... நற்செய்தியாளர்களிலே லூக்கா இல்லாமலிருந்தால் பல இனிமையான பகுதிகளை நாம் இழந்திருப்போம்... இறைவனின் வல்ல செய்லகளை மரியன்னை புகழ்ந்துரைக்கும் வாழ்த்துப்பா, இறைவனின் வாக்குபிறழாமையை போற்றும் சக்கரியாவின் பாடல், கோவிலில் இறைவாக்கினர் சிமியோன் அன்னா ஆகியோரின் பாடல், திருமுழுக்கு யோவானின் பிறப்பு, கிறிஸ்துவின் விண்ணேற்பு... என எத்தனை நிகழ்வுகளை லூக்கா வழியாக இறைவார்த்தை நமக்கு தருகின்றது! இந்த நற்செய்தியாளருக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறியே ஆகவேண்டும்.  

லூக்கா இல்லாமலிருந்தால் எரிக்கோவின் சக்கேயுவை சந்தித்திருக்கமாட்டோம், நடுவழியில் வந்த பத்து தொழுநோயாளிகளை சந்தித்திருக்கமாட்டோம், கிறிஸ்துவின் பெண் சீடர்களை அறிந்திருக்கமாட்டோம், கிறிஸ்துவிடம் வான்வீட்டை பரிசாய் பெற்ற நல்ல கள்வனையோ, உயிர்தப்பின் சீடர்களோடு வழியெல்லாம் பேசிக்கொண்டே நடந்த உயிர்த்த கிறிஸ்துவை எம்மாவூஸ் போகும் வழியில் சந்தித்திருக்க மாட்டோம். சாகாவரம் பெற்ற உவமைகளில் சிலவான ஊதாரி மைந்தன் உவமை, நல்ல சமாரியன், செல்வந்தனும் இலாசரும் போன்றவற்றை நாம் கேட்டிருக்க மாட்டோம்!

இவற்றையெல்லாம் காட்டிலும் லூக்காவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு... இறையரசை பற்றி அவரது புரிதலே அது. மற்ற மூன்று நற்செய்திகளும் கூட இறையரசை குறித்து தெளிவாய் பேசினாலும், லூக்காவின் பார்வையில் இறையரசு சிந்தனைகள் கிறிஸ்துவின் மனதை  வேறு யாரையும் விட வெகு ஆழமாய் படம் பிடித்து காட்டுகிறது என்றால் அது மிகையாகாது. இறையரசு உங்கள் மத்தியில் உள்ளது (17:21), இறையரசு வெகு அருகில் உள்ளது (10:9), என்று இறையரசின் அருகிருப்பை லூக்காவே அதிகமாய் வலியுறுத்திகிறார். நாம் இருக்கும் இடத்திலே, நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில், துன்புறும் மனிதர்களில், போராடும் மனங்களில், உண்மையை உரைக்கும் உள்ளங்களில், பிறருக்காக சிந்திக்கும் சீராளர்களில் இறையரசின் அருகிருப்பையும் அதற்காக நமது பொறுப்பையும் உணர நம்மை அழைக்கிறார். 

இறைவார்த்தையால் தொடப்பட்டு, இறையரசின் கனவோடு, இறையரசின் முன்னெடுப்பகளோடு இறையரசின் நற்செய்தியாளர்களாக வாழ புனித லூக்கா நமக்கு உதவுவாராக!

No comments: