Friday, October 26, 2018

முதிர்ச்சி நோக்கி பயணிக்க

அக்டோபர் 27, 2018: எபேசியர் 4: 7-16; லூக்கா 13: 1-9


தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கத்தோலிக்கருக்கும் கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவருக்கும் இடையேயான சண்டைக்கும் சச்சரவுக்கும் தீனி போடக்கூடிய ஒரு பகுதி இன்றைய முதல் வாசகம்! ஒருவரை ஒருவர் பார்த்து தந்திரமென்றும், சூழ்ச்சியென்றும், தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று போதனை என்றும் தூற்றி கொண்டிருக்கும் சிறுபிள்ளைத்தனம் தொடர்ந்து வந்து கொண்டுதானே இருக்கிறது? ஆனால் இன்று நம்மை முதிர்ச்சியை நோக்கி பயணிக்க அழைக்கிறார் பவுலடிகளார். கிறிஸ்துவுக்கு உரிய நிறைவை நோக்கி வளர நம்மை அழைக்கிறார்.  கிறிஸ்துவுக்குரிய நிறைவு என்பது, உண்மையும் அன்புமே என்று நமக்கு அறிவுறுத்துகிறது இன்றைய வார்த்தை. 

உண்மை என்பது இருப்பது... அதை யாராலும் கற்பனையிலும் தன் திறமையிலும் வளர்த்திட முடியாது, இருப்பதை மூடி மறைக்கவும் முடியாது. தாமாக உருவாக்கினால், எனது மனசாட்சியே எனக்கு அதை உணர்த்திவிடும்; உள்ளதை எவ்வளவு தான் மறைத்தாலும் அது இல்லாமல் போய்விடாது! நாம் உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாய் வளர்வதே நலம். 

அன்பு என்பது கடவுளின் உருவம்... அந்த உருவிலே தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம், அந்த அன்பே நம்மை கடவுளின் பிள்ளைகளாக்குகிறது. அன்பே அடிப்படை உண்மை, எல்லா உண்மைக்கும் ஊற்று அதுவே. அன்பிலே வளர்வோம், அன்பிலே  முதிர்ச்சி அடைவோம். இறைவன் மீதான அன்பிலே, நம் சகோதர சகோதரிகள் மீதான அன்பினிலே வளர உண்மையான முயற்சியெடுப்போம். 

இன்னும் எத்தனை நாட்கள் தான் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தி பேசிக்கொண்டு, இறைவனின் ஒரே உடலை துண்டு துண்டாக கூறுபோடப் போகிறோம்? இன்னும் எவ்வளவு காலம் தான் அடுத்தவரின் அழிவில் இன்பம் காண போகிறோம்? இன்னும் ஒருவரை ஒருவர் தீர்ப்பிட்டு, அடுத்தவர் வீழ்ந்தால் மகிழ்ச்சிகொண்டு, அடுத்தவரை பகைவராகவே கருதிக்கொண்டு  வாழ்வது சரியாகுமா? கிறிஸ்துவுக்கு உரியதாகுமா?  

வளருவோம்! முதிர்ச்சியை நோக்கி, கிறிஸ்துவின் நிறைவை நோக்கி, உண்மையை, அன்பை நோக்கி வளர்வோம், கணி தருவோம், இறைவனுக்குரியவர்களாவோம்!


No comments: