Tuesday, January 23, 2018

சனவரி 24: விசுவாசமுள்ளோராய் வீரியமுள்ளோராய்

விதைக்கப்படவும் வாழ்வளிக்கவும் 


சாதனைகள் புரிய அன்று, அவருக்கு விசுவாமுள்ளோராய் வாழவே இறைவன் நம்மை அழைக்கின்றார், என்று தன் வாழ்க்கையினாலே எண்பித்தார் அன்னை தெரசா. அவரின் இந்த வார்த்தைகள் இன்றைய வாசகத்தின் வழியாய் நம்மை வந்தடைகின்றன - விசுவாசமுள்ளோராய் வாழ்வது நம் பங்கு, அதற்கு வீரியமளித்து பலனளிப்பது இறைவனின் பங்கு. தாவீதுக்கு இதை தெளிவாக்குகிறார் இறைவன். சாதாரண ஆடு மேய்க்கும் சிறுவனாய் இருந்த தாவீதை அரசனாய் உருவாக்கியது இறைவனின் சித்தம் என்பதை தாவீதுக்கு நினைவூட்டும் இறைவன், அந்த சித்தத்தின் படி வாழும் வரை அவனின் அரசுக்கு முடிவே இராது என்பதையும் தெளிவாக்குகிறார். தனக்கு முன் சென்ற சவுலின் நிலைமையை உணர்ந்து வாழும் நற்பாடத்தை தன் மனதில் தெளிவாய் பெற்றுக்கொள்கிறார் தாவீது. 

விதையெடுத்துக்கொண்டு நிலம்தேடி செல்லும் விவசாயியைப்போல, நம் வாழ்வை நம்மால் இயன்ற வரை இறைவனுக்கு ஏற்றவாறு வாழ்வது மட்டுமே நமது கையில் உள்ளது. அதை பலனளிக்குமாறு மாற்றுவதும், அதன் பலன்களை உலகறிய செய்வதும் இறைவனின் செயல் என்பதை நாம் உணர்ந்து வாழ இன்றைய இறைவார்த்தை நம்மை அழைக்கின்றது. நட்டுவைத்தவனும் அல்ல, நீரூற்றியவனும் அல்ல, இறைவனே வளரும் பயிரை வளர செய்கிறார் என்று கூறும் பவுலடிகளாரின் வார்த்தைகளை சிந்தித்து பாப்போம் (1 கொரி 3:7).

இன்று நாம் சிறப்பிக்கும் புனிதராம் பிரான்சிஸ்கு சலேசியாரும் இந்த கூற்றை உணர்ந்தவராகவே இருந்தார். உங்கள் குடும்பத்திலோ குழுமத்திலோ பிரச்சனைகள் எழும் போது அவற்றை பொறுமையோடும் இனிமையோடும் அணுகும் வழியை கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றிலும் இறைவனே உங்களை வழிநடாத்துகின்றார் என்பது உண்மையல்லவா, என்று அவர் கேட்கும் கேள்வி நம்மை ஆழ்ந்து சிந்திக்க தூண்டுகிறது. 

நமது எண்ணம் முழுவதும் ஒன்றை நோக்கியே இருக்க வேண்டும்: இறைவனின் சித்தத்திற்கு விசுவாசமுள்ளவர்களாய் வாழ்வது மட்டுமே அது. வீரியமுள்ளவர்களாக்குவதும், பலனளிக்க செய்வதும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்துவிட்டால், விதைக்கப்பட தயங்கமாட்டோம்! என் அடியாரின் மீது எனக்குள்ள அன்பு என்றுமே குறையாது என்று வாக்களிக்கிறார் இறைவன். 

No comments: