Wednesday, February 28, 2018

மார்ச் 1: துன்புறுவோரை காணும் கண்கள் பெறுவோம்

அடுத்தவரின் துன்பம் உணரும் மனம் வளர்ப்போம்


பலமுறை நான் எண்ணியதுண்டு... அந்த செல்வந்தன் செய்த பாவம் தான் என்ன. இலாசரை அவன் துன்புறுத்தவோ, இலாசர் கேட்டு கொடுக்காமலோ இருந்ததாக கூறப்படவே இல்லை. அவன் இலாசரை கண்டதாக கூட கூறப்படவில்லை! அதுவே அவனது தவறானது... தன்  காலுக்கடியிலேயே துன்புற்று கிடந்த போதும் இலாசரை கண்டுகொள்ளாததே அந்த செல்வந்தனின் குற்றமாகிவிட்டது. அவனது வளமே அவனுக்கு சாபமாகிவிட்டது. அவனது நல்வாழ்வே அவனுக்கு அழிவாகிவிட்டது. அந்த நலன்களால், அந்த வளங்களால், அவன் பிறரின் துன்பங்களை காண இயலாதவனாக, இல்லாத ஒருவரின் நிலையை உணரமுடியாதவனாக மாறிப்போயிருந்தான். நமது நல்வாழ்வும், வளங்களும் பிறரை காணமுடியாதவர்களாய் நம்மை மாற்றிவிடக் கூடும். 

இன்று சிரியாவில் நடக்கும் மனிதாபிமானமற்ற அழிவை பாருங்கள். எதுவும் புதிதாக நடக்கவில்லையே என்பது போல் இந்த உலகம் போய்க்கொண்டிருக்கும் போக்கை பாருங்கள். ஆங்காங்கே எதிர்ப்புக்குரல்கள் எழுந்தாலும் வன்முறையின் சத்தமும் ஒட்டுமொத்த உலகின் நிசப்தமும் ஒருசேர அந்த குரல்களை வலுவிழக்க செய்துவிடுகின்றன. யார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று பணம் சுருட்டும் முதலைகள் சுருட்டியவண்ணமே இருக்கின்றன, ஆதிக்க சக்திகள் இந்த இடைவெளியில் தங்கள் ஆதிக்கத்தை எங்காகினும் நிலைநிறுத்த தேடிக்கொண்டே இருக்கின்றன. வஞ்சகத்திலும் வன்மநோக்கிலும் பிறருக்கு எதிராய் செயல்படுபவர்கள் தாங்கள் நினைத்ததை செய்வதிலேயே குறியாய் உள்ளார்கள். நலமும் வளமும் இறைவனிடமிருந்து வருவன என்று அறிந்தவர்கள் கூட அது தாங்களாக தேடிக்கொண்டது என்பதுபோல் தங்கள் நலனை மட்டுமே காண விழைகிறார்கள். 

இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகளும் நம் வாழ்வில் உள்ள வளங்களும் நம்மை அடுத்தவரின் துன்பத்தை உணராதவர்களாய் மாற்றிவிட கூடாது. நம் அருகே இருப்பவர்கள், நமது குடும்பத்தை சார்ந்தவர்கள், கண்முன்னே இருப்பவர்கள் என நம்மை சுற்றியே எத்தனையோ பேர் துன்பத்தில் இருக்கும் போது நான் என் தேவை, என் ஆசை, என் நலன், என் கவலை, என் இன்பம், என் மகிழ்ச்சி, என் திட்டம், என் கனவு, என் உரிமை, என் வளர்ச்சி என்பதில் மட்டும் குறியாய் இருந்தேன் எனில், அந்த செல்வந்தனை போல வருந்த வேண்டியிருக்கும்... அடுத்தவரின் துன்பம் உணரும் மனம் வளர்ப்போம், இறைவனின் உண்மையான பிள்ளைகளாவோம். 



No comments: