Thursday, March 1, 2018

மார்ச் 2: கொலை செய்ய அஞ்சிடு

வார்த்தைகளும் சிந்தனைகளும் கூட ஆயுதங்களே 

வாருங்கள் அவனை கொன்று போடுவோம்... இது இன்றைய இரண்டு வாசகங்களிலும் நாம் கேட்கும் ஒரு தொடராகும். 

நம்மை காட்டிலும் வேறுபட்டிருந்தால், நாம் சிந்திப்பதற்கு மாறாக ஒருவர் சிந்தித்தால், நாம் நினைப்பதை அவர் செய்ய மறுத்தால், அவரை வீழ்த்த சமயம் பார்த்து காத்திருப்பது நம் சமுதாயத்தில் பொதுவான பண்பாகவே மாறிவிட்டது. அவர் செய்வது சரியே என்றாலும், அவர் சிந்திப்பதும் முறையே என்று அறிந்திருந்தாலும், நம்மிடமிருந்து வேறுபடுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரது பெயரை கெடுப்பதும், அவருக்கு நெருக்கடிகள் ஏற்படுத்துவதும் எவ்வளவு பொதுவாக இன்று நடந்துவருகிறது என்பது நமக்கு வெளிச்சமே! 

நம் வார்த்தைகள், நம் தீர்ப்புக்கள், நமது கருத்துக்கள், ஏன் நமது சிந்தனைகள் கூட ஒருவரை கொல்லக்கூடும் ... அன்பற்றதாய், உண்மையற்றதாய், கனிவற்றதாய் இருக்கும்  போது! அடுத்தவரின் பெயரை கெடுத்தல், அடுத்தவரின் உள்ளத்தை அறியாது அவர்களை புண்படுத்துதல், என் தன்னலத்திற்காக அடுத்தவரின் நன்மைத்தனத்தை பயன்படுத்திக்கொள்ளுதல், அடுத்தவரின் பலவீனத்தை எனக்கு ஆதாயமாக்கிக்கொள்ளுதல், இவை அனைத்துமே கொலை தான். அடுத்தவரை இல்லாமலாக்கும் ஒரு செயல் தான். 


இன்று தங்களையே இறைவனின் மக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இப்பேற்பட்ட சிந்தனைகளிலும் செயல்களிலும் ஈடுபடுவதை நம்மால் காணமுடிகிறது! இது ஒரு வேதனைக்குரிய நிலையன்றோ?

சொல் செயலில் மட்டுமல்ல சிந்தனையிலும் கூட அடுத்தவரின் அழிவை எண்ணாதவர்களாய், அன்பையும் கனிவையும் மட்டுமே முன்னிறுத்துபவர்களாய் வாழ முற்படுவோம், இறைவனின் உண்மையான மக்களாவோம். 

No comments: