Friday, March 9, 2018

மார்ச் 10: அவரது மனம் அறிவோம்!

இறைவனை அறிவோம், அவருக்கு ஏற்புடையவராவோம்! 


அறிவடைவோமாக, ஆண்டவரை பற்றி அறிய முனைந்திடுவோமாக என்று அழைக்கிறது இன்றைய வார்த்தை. பலிகளை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று கூறும் இறைவனின் மனதை அறிய நாம் அழைக்கப் படுகிறோம்! நான் செய்யும் நற்செயல்களும் எனது பலிகளும் தியாகங்களும் ஒருவேளை என் அகந்தையை கூட்டுமெனில் அது இறைவனை அடைய அல்ல அவரை விட்டு விலகிப்போகவே வழிவகுக்கும் என்று நான் உணரவேண்டும். 

'நான்' என்ற அகந்தையும், என்னைவிட யாரும் சிறந்துவிட முடியாது என்ற சிந்தனையும், நான் தான் இறைவனுக்கு நெருக்கமாய் இருக்கிறேன் மற்றவர் அனைவரும் எனக்கு கீழ் தான் உள்ளார்கள் என்றெல்லாம் நான் நினைத்தேன் என்றால், இறைவனை விட்டு வெகு தொலைவில் நான் இருக்கிறேன் என்பதை நான் உணர வேண்டும்!

இறைவனை போற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாரொருவர் தனது சகோதர சகோதரிகளை சிறுமை படுத்துகிறாரோ, மதியாதிருக்கிறாரோ, அவர் இறைவனை அறியாதிருக்கிறார் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து சொல்லுகிறது இன்றைய வார்த்தை! கிறிஸ்தவ நம்பிக்கைகுள்ளே சாதியம் என்னும் பேய்த்தன்மை, கிறிஸ்தவ வாழ்க்கைகுள்ளே அடுத்தவரை ஏய்த்து பிழைக்கும் அரசியல் தன்மை, என் ஆதாயத்திற்காக அடுத்தவரின் பெயரை கெடுக்கும் போக்குகள்... இவையெல்லாம் இறைவனை அறியாதவர்கள் செய்யும் செயல்கள். 

தன்னை உண்மையாக அறிய இறைவன் நம்மை அழைக்கிறார்... உண்மை அன்பு எங்கு இருக்கிறதோ, உண்மையான மனித நேயம் எங்கு இருக்கிறதோ, ஒருவர் மற்றவர் மீதான உண்மையான மதிப்பும் மரியாதையும் எங்கு இருக்கிறதோ, அங்கே இறைவன் இருக்கிறார், இறைவனுக்கு ஏற்புடையோர் வாழுகின்றனர். 


இறைவனை அறிய முற்படுவோம்... வெறும் வெளித்தோற்றங்களில் அல்ல, உள்ளார்ந்த உணர்வில் இறைவனை அறிய முற்படுவோம். இறைவனை உண்மையாய் அறிந்தால் மட்டுமே அவருக்கு ஏற்புடையோராய் நம்மால் வாழ முடியும் என்பதை உணர்ந்துகொள்வோம்!

No comments: