Wednesday, March 14, 2018

மார்ச் 15: உள்நோக்கு பார்வை அன்றாடம் தேவை

உங்கள் வாழ்வை மாற்றும் துணிவு கொள்ளுங்கள்! 


அதிகம் அன்பு செய்பவர்கள் அதிகமாய் காயப்படுவார்கள் என்பது எதார்த்தம். ஏனெனில் உண்மையான அன்பு காயங்களை கணக்கிடாது, அவற்றை கண்டு அஞ்சவும் செய்யாது. இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பே இதற்கு முழுமுதல் சான்றாக வரலாறு முழுவதும் வந்துள்ளது. இன்றைய முதல் வாசகம் நம்முன் வைக்கும் நிகழ்வு இதை தெளிவாய் நமக்கு உணர்த்துகிறது. அத்தனை புதுமைகளையும், மாபெரும் அறிகுறிகளையும் எகிப்திலும் பாலைவனத்திலும் அவர்கள் கண்டிருந்தும் எத்தனை விரைவில் இறைவனை மறந்து தங்களுக்கு என்ன தேவை என்பதை தேடி செல்ல தயாராகிவிட்டனர் இந்த மக்கள். அவர்கள் செய்யவேண்டி இருந்ததெல்லாம் ஒரே ஒரு உள்நோக்கு பார்வை - தாங்கள் யார், தாங்கள் கடந்து வந்த பாதை என்ன, அந்த பாதையில் பட்டறிந்த உண்மைகள் என்ன, உள்ளத்தில் பதிந்துள்ள நினைவுகள் என்னென்ன என்று சற்று சிந்தித்திருந்தால் இந்த தவற்றை செய்திருக்கமாட்டார்கள். மோசே இறங்கி வந்த அந்த கற்பலகையை உடைத்து அவர்களுக்கு உணர்த்தியது இது தான் - உள்நோக்கி பாருங்கள் உண்மையை உணருங்கள். அவர்கள் உடனே உணர்ந்தார்கள்...மனம் வருந்தினார்கள். 

இதை கேட்கும் போதே நமக்கு ஒன்று தோன்றலாம் - எப்படி இவர்களால் இது முடிந்தது? இவ்வளவு மனசாட்சியற்றவர்களாக இருக்கிறார்களே என்று நினைக்க தோன்றலாம். சற்றே பொறுங்கள்... நமக்குள்ளாக ஒரு பார்வை பாப்போம்...உள்நோக்கிய பார்வை... இவர்களை விட நாம் எந்த விதத்தில் உயர்ந்திருக்கிறோம்?

இறைவன் நமக்கு செய்த நன்மைகளையெல்லாம் எத்தனை விரைவில் நாம் மறக்கிறோம். நமக்கென சில கடவுள்களை நாம் உருவாக்கிக்கொள்வதில்லையா? ஒரு சில நிமிடங்கள் நீண்டுவிட்டாலும் இறைவார்த்தையை விட நமது நேரம் நமக்கு பெரிதாக தோன்றுவதில்லையா? வேலையை காரணம் காட்டி இறைவனுக்கு உரியதை அவருக்கு தர நாம் மறுக்கும் போது நமது வேலை நமக்கு பெரிதாவதில்லையா? எனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற துடிப்பில் இறைவன் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் அவரது திட்டம் என்ன என்பதை எல்லாம் ஒரு நொடிகூட சிந்தியாமல் செயல்படும்போது எனது விருப்பு வெறுப்பு பெரிதாவதில்லையா? இது தானே இஸ்ரயேல் மக்கள் செய்ததும்?

உங்கள் செயல்களும் சிந்தனையுமே  உங்களை தீர்ப்பிடும். இந்த உலகம் இதைத்தான் எதிர்பார்க்கிறது, இந்த காலம் அப்படிப்பட்டது என்றெல்லாம் கூறி நீங்கள் உங்களையே நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் உண்மையென்று ஒன்று உண்டு. அது மட்டுமே உங்களை விடுவிக்கும், என்கிறார் கிறிஸ்து. 

உள்நோக்கி பாருங்கள், உங்கள் உள்ளத்தை நோக்கி பயணியுங்கள், இதுவரை கடந்து வந்த பாதையை சற்று திரும்பி நோக்குங்கள்... இறைவனின் அன்பு உங்களை எப்படியெல்லாம் தாங்கியுள்ளது, கடவுளின் அரவணைப்பு உங்களை எப்படியெல்லாம் வழிநடத்தியுள்ளது என்பதை உணருங்கள்... உங்கள் தவறுகள் உங்களுக்கு புரியும். உங்கள் வழிகளை மாற்ற துணிவு கொள்ளுங்கள், திரும்பி வாருங்கள் என்று இறைவன் நம்மை அழைக்கிறார். உள்நோக்கு பார்வை அன்றாடம் தேவை என்பதை உணர்வோம், இறையன்பில் வளர்வோம். 


No comments: