Tuesday, March 6, 2018

மார்ச் 7: நம்பிக்கையில் வேரூன்ற

கட்டளைகளும் கிறிஸ்தவ வாழ்வும்...


சட்டத்திற்கும் சட்டவல்லுனர்களுக்கும் பரிசேயருக்கும் எதிராக எவ்வளவு தான் பேசியிருந்தாலும், கிறிஸ்து திருச்சட்டத்தை எதிர்த்தவர் அல்லர்... ஆனால் அந்த சட்டத்திற்கு ஆழமான அர்த்தம் ஒன்று உண்டு, அதை தவறவிட்டு விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தவர்! 

திருச்சட்டம் என்பது, அல்லது நம் பொதுவான பேச்சு வழக்கில் கூறினால், கட்டளைகள் என்பது வெளிப்படுத்தப்பட்ட இறைசித்தமாகும். இறைவனின் சித்தத்தை செய்ய நாம் விரும்புகிறோம், முயற்சிக்கிறோம்... அனால் அதை எப்படி அறிந்து கொள்வது என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஒரு கேள்வி. அவ்வாறிருக்க இறைவனின் சித்தம் நமக்கு தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ள ஒரு வழி, கட்டளைகளாகும். என்னை அனுப்பினவரின் சித்தத்தை செய்வதே எனக்கு உணவு என்று கூறிய கிறிஸ்து இதை எதிர்ப்பாரா? 

அவர் எதிர்த்ததெல்லாம் கண்மூடித்தனமாக எதை செயகின்றோம், ஏன் செய்கின்றோம் என்ற புரிதலே இல்லாமல் சிலவற்றை செய்தே ஆகவேண்டும் என்று சாதிப்பதையே. கட்டளைகளுக்கும் நமது நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பே நமது மனதில் உள்ள புரிதல் தான் என்பதை நாம் உணர வேண்டும். 


இறைவனுக்காக எதை செய்தாலும் அதை உள்மனபுரிதலோடு, ஆழ்மன நிலைப்பாடோடு செய்யும் போதே அது உண்மையான நம்பிக்கையின் வெளிப்பாடாகின்றது. கட்டளைகளை கடைபிடிப்பது நமது நம்பிக்கையில் வேரூன்ற செய்ய வேண்டும், நம்பிக்கையை மறந்து செயல்களில் மட்டுமே நின்றுவிடச்  செய்யக்கூடாது. 

இதை உணர்ந்து ஒவ்வொரு நாளும் இறையுறவில் புரிதலுடன் வளர்வோம், நம்பிக்கையில் வேரூன்றுவோம். 

No comments: