புனித வாரத்தின் புதன் - 28.03. 2018
கிறிஸ்துவை காட்டிக்கொடுக்க தக்க சன்மானத்தோடு ஒப்புக்கொள்கிறார் யூதாஸ் இஸ்காரியோத்து. நான் உங்களை நண்பர்களென்றேன், என்று தன் சீடர்களை எல்லாம் தன தோழர்களாகவே கருதிய இயேசுவுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இதோ காட்டிக்கொடுக்க துணிந்துவிட்ட யூதாஸ் மட்டுமல்ல, சீடர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விதத்திலே இயேசுவுக்கு ஏமாற்றத்தையே தந்தனர்... தங்கள் பயத்தாலும், பதட்டத்தாலும்.
ஏமாற்றம் என நாம் கூறினாலும், கிறிஸ்துவுக்கு அது எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. காட்டிக்கொடுக்கப்பட்டு, மறுதலிக்கப்பட்டு, தனியேவிடப்பட்ட போதும் அவர்கள் மீது அவரது பார்வை மாறவே இல்லை... தொடர்ந்து அவர்களை தோழர்களாகவே கருதினார் - அந்த நம்பிக்கையை முன்னிட்டே அவர்கள் மனம் திருந்தி, கிறிஸ்துவிடம் திரும்பி வந்தனர், எவருக்காகவும், அவரது இறையரசு பணிக்காகவும் தங்கள் உயிரையும் கொடுக்கும் அளவுக்கு தயாரானார்கள்.
ஆனால் யூதாஸோ இறையருளுக்கு அந்த வாய்ப்பை கூட தரவில்லை - தனக்கு தானே முடிவை தேடிக்கொண்டார்! நான் தோழராய் வாழ இயலாது என்று அவரே தவறாக முடிவெடுத்துக்கொண்டார்.
உங்களை என் தோழர்களாகவே கருதுகிறேன், என்று நம்மையும் பார்த்து கிறிஸ்து கூறுகிறார். எத்தனை தவறுகள் நேர்ந்தாலும், நீங்கள் என் தோழர்களே, திருந்தி என்னோடு வாழ நினைத்தால் என் மனக்கதவு என்றுமே உங்களுக்கு திறந்திருக்கும் என்று நம்மை அழைக்கிறார்.
அவரது தோழர்களாய் இறையரசின் மாந்தர்களாய் நாம் வாழ பல சோதனைகளை தாண்டி வாழ வேண்டியுள்ளது... நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? சோதனைகளை எதிர்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறோமா? அவற்றை சந்திக்க தயங்கி ஓரிடமாய் நின்றுகொண்டிருக்கிறோமா? அல்லது தவறான நிலைப்பாடுகளால் கிறிஸ்துவை காட்டிக்கொடுக்கும் தோழர்களாய் மாறிக்கொண்டிருக்கிறோமா?
No comments:
Post a Comment