Wednesday, March 28, 2018

அன்பராய் நீ!

பெரிய வியாழன் - 29.03. 2018 


இன்றைய நிகழ்வுகள் மூன்று வார்த்தைகளில் அடங்கிவிடுகின்றன... உணவு, நினைவு, கனவு!

உணவு... தன் சீடர்கள் மீது தான் கொண்டிருந்த அன்பை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் கிறிஸ்துவை இன்று காண்கின்றோம். அன்பின் அடையாளமாய் ஒரு விருந்து வழங்குகின்றார். அவர்கள் மீது மட்டுமல்ல உலக மாந்தர் அனைவர் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்த அதே விருந்தை பயன்படுத்தி, தன் உடலையே உணவாகவும், தன் இரத்தத்தையே பானமாகவும் தருகிறார். அன்பின் வெளிப்பாடாய் அந்த உணவு சுவையூட்டம் பெறுகின்றது.

நினைவு... உணவு உடலை வலுப்படுத்தினாலும் மனதை வலுப்படுத்த நினைவுகள் தேவைப்படுகின்றன. தன் சீடர்கள் தன் நினைவாய் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்த கிறிஸ்து, தனது அன்பை பகிர்வதே அந்நினைவாய் இருக்கவேண்டும் என்று எண்ணி, இதை என் நினைவாய் செய்யுங்கள் என்று, அந்த விருந்தையே நமது நம்பிக்கையின் அடித்தளமாய் விட்டு சென்றார்.

கனவு... இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என அவர் எண்ணியதன் காரணம் என்னவென்று சிந்தித்தோமேயானால், அவருக்கு இருந்த ஒரு கனவு... இறையரசின் தீமூட்டவே வந்தேன் அது கொழுந்துவிட்டு எரிவதை காண ஆவலாய் உள்ளேன் என்றவர் அவர். தனது இறையரசின் கனவை அவரது சீடர்களாகிய நாம் நினைவாக்க வேண்டுமென விரும்புகிறார் - நம்மிடையே பகிரப்படும் அன்பின் வழியாக.

ஆம், அவரது அன்பின் உணவிலே பங்கெடுக்கும் போது, அந்த உணவின் நினைவை வாழ்வெல்லாம் கொண்டிருக்கும் போது, அந்த அன்பையே நம்மில் கொண்டு பிறரோடு உறவுகொண்டு வாழும் போது, நாம்  அவரது அன்பராய் மாறுகின்றோம்!

இன்று அவரது அன்பராய் நீ வளர முடிவெடுப்பாயா?














No comments: