பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு - 15.04.2018
வாழ்வின் பல வேளைகளில் நாம் நமது துன்பங்களையும், சோதனைகளையும் முன்னிறுத்தி ஐயம் கொள்வதுண்டு... இந்த மண்ணக வாழ்விற்கு உண்மையிலேயே பொருள் உள்ளதா? எதை நோக்கி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்? நிகழும் அனைத்திற்கும் ஏதாவது காரணமுள்ளதா? என்றெல்லாம் கேள்விகள் எழும். அனைத்திற்கும் பதில் ஒருவரே..அது கிறிஸ்து மட்டுமே, அவரே காலத்தின் நிறைவு...
அவரில் என் வாழ்வு வாழப்படும் போது அந்த நிறைவு என்னை ஆட்கொள்ளுகிறது... அவரை தவிர்த்து என் வாழ்வை வாழ நினைக்கும் போது அந்த நிறைவு என்னை விட்டு விலகி போகின்றது. இன்று பொருளின்றி வாழ்வோர் எத்தனை பேர், அவர்கள் மனதில் இருக்கும் கேள்விகளும் ஐயங்களும் எத்தனை... நாமறிந்ததே!
இந்நிறைவை நாமடைய இயல்பைமீறிய செயல்கள் ஏதும் செய்யவேண்டிய அவசியமில்லை! என் அன்றாட வாழ்வே இந்நிறைவை நோக்கிய பயணம் தான் என்பதை நான் உணர்ந்துகொள்ள வேண்டும். என் அன்றாட தேர்வுகள் என்ன? நான் பேச தெரிந்துகொள்ளும் சொற்கள், நான் சிந்திக்க முதன்மைப்படுத்தும் எண்ணங்கள், என் வாழ்வில் நான் கொடுக்கும் முக்கியத்துவங்கள்...இவையே என் வாழ்வை நிர்ணயிக்கின்றன. இவை கிறிஸ்துவை நோக்கி இருக்கும் போது... என் அன்றாட வாழ்வே நிறைவை நோக்கிய பயணமாகிறது!
No comments:
Post a Comment