Tuesday, April 3, 2018

உயிர்ப்பின் அழைப்பு: உங்கள் மனங்களை திறந்திடுங்கள்

ஏப்ரல் 3: பாஸ்கா எண்கிழமையில் செவ்வாய் 

"நாங்கள் என்ன செய்யவேண்டும்" என்று தங்கள் உள்ளம் குத்தப்பட்டவர்களாய் இன்று மக்கள் அப்போஸ்தலர்களிடம் வினவுவதை நாம் காண்கின்றோம். இதுவே மனம் மாறிய மக்களின் முதல் அறிகுறி - உள்ளம் குத்தப்பட்டவர்களாய் ஏதாவது செயதேயாகவேண்டும் என்று துடிக்கும் மனநிலை. 

ஒருமுறை, ஆண்டின் தொடக்க வாரத்திலே மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியபோது ஏற்பட்ட மறக்கமுடியாத நினைவு ஒன்று எனக்கு உண்டு. அந்த நாளின் பயிற்சி அனைத்தும் முடிந்தவுடன், ஆசிரியர்கள் களைந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் என்னிடம் வந்தார்: "தந்தையே நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு என்னால் வந்தபடியே திரும்பி போக இயலாது. நான் ஏதாவது செய்தேயாகவேண்டும், எனக்கு ஒரு ஆலோசனை கூறுங்களேன்" என்றார். நானும் அவர் செய்யக்கூடியவை பற்றி அவரோடு சிந்திக்க, உடனே என்னோடு தொடர்பில் இருந்த ஒரு மறைபரப்பு குழவிலே உறுப்பினராக இணைந்து ஆர்வமாய் பணியாற்றத் தொடங்கிவிட்டார்! மூன்று வருடங்களாய் அந்த குழுவில் அவர் தன்னார்வ தொண்டராய் பணியாற்றிவருகிறார். இருநூறு ஆசிரியர்கள் அந்த கருத்தரங்கில் பங்குபெற்றிருந்தாலும், இவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளம் குத்தப்பட்டு ஒரு புது வழி பிறந்தது என்பது எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு. 

உயிர்த்த கிறிஸ்துவை நம் உள்ளங்களை தொட நாம் அனுமதித்தோமேயானால் நம்மிலும் பல மாற்றங்களை அவர் நிகழ்த்தக்கூடும். ஆண்டவரே நான் ஏதாவது செய்தேயாகவேண்டும் என்று நாம் கூறினால் உயிர்த்த கிறிஸ்து நம்மை பார்த்து... நான் என் தந்தையிடம் திரும்புகிறேன், நான் தொடங்கிய பணியை நீ தொடர்வாயா -என்று கூறுவது நமக்கு கேட்கும். இதை அப்போஸ்தலர்கள் உணர்ந்தார்கள், தங்கள் வாழ்க்கையையே அதற்காக கையளித்தார்கள். 

நமக்குள்ளாக இந்த கேள்வி அவ்வப்போதாவது எழுந்ததுண்டா? நான் என்ன செய்யவேண்டும்? என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர் ஆண்டவரே? என்று உள்ளம் குத்தப்பட்டு இறைவனிடம் கேட்டதுண்டா? 

இறைவனின் உயிர்ப்பு நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே: மனங்களை திறங்கள், உள்ளங்கள் குத்தப்பட்டு என்ன செய்வதென்று சிந்தியுங்கள், உங்கள் வாழ்வை முழுமையாய் வாழுங்கள்.


No comments: