Thursday, May 17, 2018

மே 17: ஒருமனத்தன்மை -தூய ஆவியாரின் அடையாளம்

ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாய் 

தி ப. 22:30 - 23: 6-11; யோ 17: 20-25



சாவின் விளிம்புக்கு சென்று திரும்பி வரும் பவுலடிகளாருக்கு கடவுள் தரும் செய்தி: இன்னும் இது போன்றே பல சூழல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அஞ்சாதே, கலங்காதே... உனக்கு முன் நான் செல்கிறேன். சங்கடங்கள், சோதனைகள்
அனைத்தையும் தாண்டி நம்மால் துணிச்சலோடு வாழ முடியும்... ஏனெனில், நம் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார், நமக்கு முன்னே செல்கிறார். இதோ எருசலேமில் நீ சான்று பகர்ந்தது போன்றே உரோமையிலும் சான்று பகர வேண்டும் என்று பவுலடிகளாரை தயார்படுத்துகிறார். 

சோதனைகளும், துயரங்களும், அசச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வரும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் - ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்ட மக்களாய், இறைவனில் இணைந்து நிற்க வேண்டும். இறைத்தந்தைக்கும், இறைமகனுக்கும் நடுவே இருக்கும் உறவாய், ஒருமனத்தன்மையாய், அன்புறவாய் திகழும் இறையாவியின் அடையாளமே இது தான் - நமது ஒருமனத்தன்மை. 

இன்றும் தொடர்ந்து நற்செய்தியில் கிறிஸ்து நமது ஒற்றுமைக்காக செபிக்கிறார். ஆவியாரின் துணையின்றி இந்த ஒருமனத்தன்மை நம்மில் வளர கூடுமா? ஆண்டவரின் ஆவியை நாம் உண்மையிலேயே பெற்றிருந்தோமெனில், இது சாத்தியமாகும். இல்லையென்றால் இது நிகழ வாய்ப்பே இல்லை.

தொடக்க கால திருச்சபை அத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும், அசச்சுறுத்தலுக்கு மத்தியிலும், துணிவாய் நின்றது, நிலையாய் பயணித்தது என்றால் அதற்கு காரணம், தூய ஆவியார், தூய ஆவியார் அளித்த ஒற்றுமை, அவர்கள் மத்தியில் வளர்ந்த ஒருமனத்தன்மை. வேறுபாடுகள், தனித்தன்மைகள் இவற்றையெல்லாம் உணர்ந்து பாராட்டி அவற்றையெல்லாம் தாண்டி ஒருமனத்தோராய் வாழ நாம் முடிவெடுக்கும் போது ஆவியின் மக்களாகிறோம், ஏனெனில் ஒருமனத்தன்மையே ஆவியின் அடையாளம். 

No comments: