Friday, May 18, 2018

மே 19: நாம் சென்றிட நம்மில் வரும் ஆவியார்

வருவதும் போவதும் இருப்பதும் இழப்பதும் 

தி ப. 28:16-20, 30-31; யோ 21: 20-25


இன்று வாசகங்களை உணர்ந்து தியானித்தால், ஒரு கதை முடிவின் தருணம் நம் கண்முன் தெரியும்... பவுலடிகளார் வீட்டுக்காவலிலே இருக்க தன்னையே தயாரிக்கிறார், இயேசுவோ தன் சீடர்களை விட்டு அகல தயாரிக்கிறார். யோவானின் நற்செய்தியும் நிறைவுக்கு வருகிறது... பழைய திரைப்படங்களின் முடிவிலே "சுபம்" என்று எழுதுவார்கள் அது போன்றதொரு தருணம். ஆனால்... முடிந்துவிட்டது என்று எண்ணாதீர்கள்... முடிந்தது தான் ஆனால் தொடங்குவதற்காகவே! தொடர்வதற்காகவே! இங்கு நாம் காண்பது 'சுபம்' அல்ல, 'தொடரும்...'

நான் உங்களை விட்டு செல்கிறேன் என்று கவலை படாதீர்கள், உண்மையில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும், ஏனெனில் நான் செல்லாவிடில் என் தந்தையிடமிருந்து உங்கள் வழிகாட்டியாம் ஆவியானவர் எப்படி வருவார், என்று தன் சீடர்களிடம் ஏற்கனவே கிறிஸ்து விளக்கியிருந்தார். வருவதும் போவதும், இருப்பதும், இழப்பதும்,  சிறைப்படுவதும், விடுதலையாவதும், உண்பதும், குடிப்பதும், வாழ்வதும், இறப்பதும்... அனைத்தும் ஒரே இலக்கை நோக்கியது தானே: கிறிஸ்துவை பின்செல்வது! இதை நமக்கு சாத்தியமாக்குபவர் தூய ஆவியே!

நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும், இறையாட்சி நிறுவப்படவேண்டும்... இதற்காக அனைத்தையும் நம்மில் சாத்தியமாக்குபவர் தூய ஆவியார்! இந்த  இலக்கை நோக்கி நாம் துணிந்து விரைந்து செல்ல நம்மிலே வருபவர் தூய ஆவி. அன்னையோடும், சீடர்களோடும், இந்த ஆவிக்காக காத்திருந்து செபிப்போம், அவரிலே நிறைவடைவோம்!

No comments: