ஜூன் 13: பதுவை நகர் புனித அந்தோணியார்
இறைவனின் மகிமையை உணர்த்திய மாபெரும் புனிதர்
சிறப்பான சில தகவல்கள்:
- பிறப்பு: 15, ஆகஸ்ட், 1195. பிறந்த இடம் போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன். உண்மையில் இவர் லிஸ்பன் நகர் அந்தோனியார் என்று அழைக்கப்படவேண்டும் எனினும் அவர் இத்தாலியிலுள்ள பதுவை நகரில் ஆற்றிய பணியும் அதன் வழியாய் வெளிப்பட்ட இறைவனின் மகிமையும் மறக்க முடியாதவை ஆதலால் மக்கள் இவரை பதுவை நகர் அந்தோனியார் என்று அழைக்கலாயினர்.
- இறப்பு: 13, ஜூன், 1231. இறக்கும் போது அவருக்கு வயது வெறும் 36 மட்டுமே!
- புனிதர்: அவர் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி அவர்களால் 30, மே 1232 அன்று புனிதராக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு வயது 37 கூட நிரம்பவில்லை. இறந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே அவரை புனிதராய் அறிவிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் மக்கள் அவர் இறந்தவுடனேயே, அவர் புனிதர் என்பதை கண்டுகொண்டனர். அவர் வாழும்போதே அவரது வாழ்வில் வெளிப்பட்ட இறை மகிமை, தொடர்ந்து அவரது இறப்பின் பிறகும் அவரது பரிந்துரையால் வெளிப்பட்ட வண்ணமே இருந்தது.
- அவரது திருமுழுக்கு பெயர் பெர்தினாந்து மார்ட்டீன்ஸ் தே புலோஸ் என்பதாகும். அவர் துறவியாக பிரான்சிஸ்குவின் சபையில் சேர்ந்த போது தனது பெயரை அந்தோணி என்று மாற்றிக்கொண்டார்.
- அவரது வாழ்நாட்களிலேயே நடந்த சில புதுமைகளால் அவர் காணாமற்போன ஆட்களையோ பொருட்களையோ தேடி கொடுக்கும் புனிதராக கருதப்படுகிறார்.
- இன்று அவரது பேராலயம் இருக்கும் பதுவையில் அவரிடம் நல்ல வரன் கிடைக்கவும், அல்லது திருமண வாழ்வில் பிரச்சனைகளில் இருக்கும் தம்பதியினர் தொல்லைகள் தீரவும் பரிந்துரை கேட்கின்றனர்.
- இப்பேராலயத்தில் அவரது நாவு இன்றும் அழியாது இறைவனின் அரும்செயலாய் நமக்கு காட்சியளிக்கின்றது.
- புனித பிரான்சிஸ்கு அசிசியாரின் காலத்திலேயே வாழ்ந்தவர் என்று எண்ணும் போது இரு பெரும் புனிதர்கள் ஒரே சபையில் ஒரே நேரத்தில் உருவாகிக்கொண்டிருந்தனர் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
- மரியன்னைக்கும் யோசேப்புக்கும் அடுத்து அதிகமாய் அன்பு செய்யப்படு புனிதர் என்றால் அது புனித அந்தோணியாரே! அதேபோல் மரியன்னையையும் யோசேப்பையும் தவிர குழந்தை இயேசுவை கையில் சுமந்தவாறு இருக்கும் புனிதர் இவர் ஒருவரே! இதற்கு பல விளக்கங்கள் உண்டு: அவர் ஒருமுறை செபித்துக்கொண்டிருந்த போது குழந்தை இயேசு அவருக்கு காட்சியளித்தார் என்பது ஒரு விளக்கம். 17ம் நூற்றாண்டில் ஒரு பிரான்சிஸ்கன் துறவி புனித அந்தோனியார் குழந்தை இயேசுவை சுமந்தவாரு ஒரு காட்சி கண்டார் என்பது மற்றொரு விளக்கம். ஆனால்...
- இந்த விளக்கங்களில் எல்லாம் சிறந்தது இதுவே: அவர் இறைவார்த்தையை எந்த அளவுக்கு நேசித்தார் அறிவித்தார் என்றால், அந்த இறைவார்த்தையே தான் மனுவுருவான நிலையில் அவரது கரங்களில் வந்து தாங்கினார்!
- நமது உள்ளங்களிலும் இறைவார்த்தையை நாம் நெருக்கமாய் உணர்ந்தோம் என்றால், அந்தோணியாரை போன்றே இறைவார்த்தையை நாமும் நமது கரங்களில் ஏந்துவோம்!
- கோடி அற்புதராம் பதுவை நகர் புனித அந்தோனியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
No comments:
Post a Comment