Thursday, June 14, 2018

ஜூன் 15: அமைதி - ஆன்மாவின் குரல்

அமைதியின் தெய்வம், அருகிருக்கும் தெய்வம் 

1 அரசர் 19: 9a,11-16; மத் 5: 27-32

அஞ்சவைக்கும் இடியை விட, அலற வைக்கும் நெருப்பை விட, ஆழ்மனதில் ஒலிக்கும் அமைதியில் அதிகம் உறைபவர் நம் ஆண்டவர். அமைதியில் என் ஆன்மாவின் குரல் ஒலிக்கிறது - நன்மை தீமை, சரி தவறு, புனிதம் பாவம், நேர்மை அநீதி - என்று அனைத்தையும் தொடர்ந்து எனக்குள் உணர்த்திக்கொண்டே இருப்பது இந்த ஆன்மாவின் குரலே! அதுவே உண்மையின் குரல், அதுவே அமைதியின் தெய்வத்தின் குரல், அதுவே அருகிருக்கும் தெய்வத்தின் குரல். 

கூச்சலிடுவதே இன்றைய உலகத்தின் கலாச்சாரமாகிவிட்டது - எங்கு நோக்கினும் கூச்சல். வெறும் பானைகள் அதிகம் ஓசையிடும் என்பதை போல, அதிகம் கூச்சலிட்டு தன்னிடம் உண்மை இல்லை என்னும் நிலையை மறைத்துவிட எத்தனிக்கின்றது இன்றைய உலகம். இன்றைய அரசியலை பாருங்கள்: உரக்க பேசுபவர்களே அதிகம், உண்மை பேசுபவர்கள் இல்லை. இன்றைய ஊடகங்களும் அதையே தான் முன்னிறுத்துகிறது - யார் உரக்க சொல்கிறார்கள், யார் முதலில் சொல்கிறார்கள் என்று தான் பார்க்கிறார்களே ஒழிய, யார் உண்மையை சொல்கிறார்கள் என்று யாரும் தேடுவதில்லை. 

இன்றைய இறைவார்த்தை கேள்விக்குள்ளாக்கும் போக்கு இதுவே! உண்மை எங்கிருக்கிறது - உச்சத்தில் ஒலிக்கும் உன் குரலிலா அல்லது உள்ளத்தின் உண்மையான ஆழத்திலா? யார் சரி - தன்னையே முன்னிறுத்திக்கொண்டு தான் சொல்வதெல்லாம் உண்மை என்றும் தான் மட்டுமே நேர்மையாளன் என்றும் தம்பட்டம் அடிக்கும் பலரா அல்லது ஆழ சிந்தித்து உள்ளார்ந்து உணர்ந்து உண்மைக்காக உயிர்கொடுக்கவும் தயாராகும் ஒருசிலரா?

நான் ஆயிரம் பேசலாம் ஆனால் என் வாழ்வு எதை பேசுகிறது? மற்றவருக்கு உலகிற்கு சமூகத்திற்கு என பல போதனைகள் செய்யலாம் ஆனால் ஆழ்மனதில் நான் நம்பும் உண்மை எது? என் ஆழ்மனமே எனது நீதிபதி. என் ஆன்மாவே எனது உண்மையின் குரல். அந்த ஆழ்மனதின், ஆன்மாவின் அமைதியே இறைவனின் குரல்! 

No comments: