Monday, June 25, 2018

ஜூன் 26: குறுகிய வாயில் ஆன்மிகம்

கண்டறிவோர் சிலர், தேர்ந்துகொள்வோர் வெகு சிலரே! 

2 அரசர் 19: 9-11,14-21,31-36; மத் 7: 6, 12-14

வாழ்வில் நெருக்கடி மிகுந்த சூழல்கள் வரும் போது, இதற்கு மேல் என்னால் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்படும் போது நாம் அனைவருமே கேள்வி: எங்கே அந்த கடவுள்? கடவுளே என்று ஒருவர் கதறுகிறார் என்றால் அவர் தன் ஆற்றலின் விளிம்புக்கு வந்துவிட்டார் என்று உலகம் அறிந்து கொள்கிறது... அல்லது, தனது ஆற்றலின்  விளிம்புக்கு வரும்போது தான் கடவுளை அணுக வேண்டும் என்று இந்த உலகம் கற்பிக்கின்றது. இன்று நாம் முதல் வாசகத்தில் காணும் நிலையும் அதுவே. அதுவரை இறைவாக்கினரும், இறைவாக்கும் பலமுறை அவர்களை தொடர்ந்து எச்சரித்திருந்தாலும், தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்த மக்களுக்கு ஒரு பெரும் நெருக்கடி என்று வந்ததும், மக்களும், மக்கள் பிரதிநிதியாயிருந்த அரசனும் கடவுளிடம் கூக்குரலிடுகின்றனர். 

நம்மை பார்த்து இன்றைய வார்த்தை கேட்கும் கேள்வி இதுவே: வாழ்வில் நெருக்கடியோ, வேறு வழியறியாத நிலையோ, பெரும் பாரமோ வரும்போது தான் கடவுளை நினைக்கவோ, அழைக்கவோ, அவரை பற்றி சிந்திக்கவோ வேண்டும் என்று உங்களுக்கு கற்று தந்தது யார்? தொடக்கம் முதலே, சரியான, நிறைவான, முறையான, தெளிவான, கடவுளுக்கு உரிய, இறையரசுக்கு உகந்த தெரிவுகளையே நீங்கள் மேற்கொண்டால், நெருக்கடி வரும்போது அதை சந்திப்பதற்கும், இறைவனின் உடனிருப்பை ஆழ உணர்வதற்கும் ஏதுவாய் இருக்குமல்லவா?

சில வேளைகளில் நமது வாழ்வில் சிறு சிறு நிகழ்வுகளிலும் நிலைகளிலும் சில சமரசங்கள் தேவை படுகின்றன, அவற்றை நாம் செய்தே ஆக வேண்டும் என்று இன்றைய உலகம் நமக்கு அறிவுறுத்துகின்றது, நம்மை நம்பவும் வைத்திருக்கின்றது. இந்த சமரசங்களை நாம் உடன்படும் பபோது சில நெருக்கடிகள் உடனே விலகுகின்றன, மன நிம்மதி நமக்கு வந்து சேருகின்றது. அதனோடே வேறு பலவும் நமது வாழ்க்கையில் நுழைகின்றன, நமது வாழ்க்கையை வலுவற்றதாய், எதிர்ப்பாற்றல் அற்ற ஒன்றாய் நம்மை அறியாமலே மாற்றிவிடுகின்றன... நாம் எதிர்பாராத ஒரு தருணத்தில் நம்மை பெரும் நேரும் நெருக்கடி ஒன்றில் கொண்டு நிறுத்திவிடுகின்றன! அந்த நெருக்கடியிலிருந்து நாம் கூக்குரலிட்டு என்ன பயன்!

இதற்கு தீர்வு என்ன? குறுகிய வாயில் ஆன்மிகத்தை தேர்ந்துகொள்ளுங்கள் என்கிறது இன்றைய வார்த்தை. முடிவெடுக்க வேண்டிய எந்த ஒரு சூழலிலும், எது எளிதானது, எது வசதியானது, எது தொல்லையற்றது, எது அனைவரும் தேர்ந்துகொள்வது என்பது போன்ற எந்த கேள்வியும் எழுப்பாதீர்கள். நாம் எழுப்பவேண்டிய கேள்வி ஒன்று மட்டுமே: கடவுள் என்னிடமிருந்து எதிர்பார்க்கும் அந்த ஒரு முடிவு, அந்த ஒரு தேர்வு, அந்த  ஒரு செயல்பாடு எது? நான் நுழைய வேண்டிய அந்த ஒரே குறுகிய வாயில்... நான் என்னையே சற்று குறுக்கி நெளித்து நுழைய வேண்டிய அந்த ஒரே குறுகிய வாயில் எது? இதை கண்டறிபவர்களோ சிலர், கண்டறிந்தபின் அதை தேர்ந்துகொள்பவர்களோ வெகு சிலர்!

No comments: