Tuesday, June 26, 2018

ஜூன் 27: மூலக்கருவிலிருந்து வாழ்ந்திட முற்படு

உன் மூலம், உன் கரு, உன் உரு, உன் பலம் - அறிவாயா?

2 அரசர் 22: 8-13, 23: 1-3; மத் 7: 15-20

கனிகளிலிருந்தே மரத்தை அடையாளம் காண முடியும்... இலையும் பூவும் காயும் கூட கனிகளே, நாம் காணும் மரத்தின் குணத்தை பொருத்து! மகிழம் மரத்தில் யாரும் மாம்பழம் தேடுவதில்லை. வேங்கை மரத்திடம் யாரும் மயக்கும் வாசம் கொண்ட மலர்கள் கேட்பதில்லை. நமது வாழ்வின் உண்மை பயனும், முழு பொருளும் நமக்கும் உலகிற்கும் விளங்க வேண்டும் என்றால் அது நமது சொல்லிலும், செயலிலும், நமது வாழ்வின் முறையிலும் வெளிப்படவேண்டும். அதற்கு நாம் முதலில் நமது மூலத்தையும், கருவையும், நமது உருவையும், பலத்தையும் உணர்ந்திருக்க வேண்டும்! ஆகையால் தான் கிறிஸ்து 'என்னை நீங்கள் நம்பாவிட்டாலும், என் செயல்களையாவது நம்புங்கள்' (யோ 10:38) என்றார். இது கிறிஸ்துவால் முடிந்தது ஏனெனில் அவர் தனது மூலக்கருவிலிருந்தே தனது வாழ்வை வாழ்ந்தார்! 

தனது மூலம், தனது மையம், தனது வாழ்வின் உட்கரு இவற்றை ஆழமாய் உணர்ந்திருந்தார் கிறிஸ்து. அந்த உள்ளார்ந்த நிலையில் தனக்கும் தன் தந்தைக்கும் இருந்த பிரிக்க முடியாத உறவை உணர்ந்தார், நம்பினார், அதையே தன் வாழ்வாக்கினார். அதனால் தான் அவரது வாழ்வே ஒரு மாபெரும் வெளிப்பாடாய், மகிமை நிறைந்த அனுபவமாய் மாறியது. 'நானும் என் தந்தையும் ஒன்றே' (யோ 10:30) என்று கூறுமளவுக்கு அவருக்கு துணிச்சல் இருந்தது.

இன்றைய முதல் வாசகம் அழகானதொரு அடையாள நிகழ்வை நமக்கு தருகிறது... கிறிஸ்துவை போன்றே நமது மூலக்கருவிலிருந்து வாழ்வதற்கான திறன் நமது உள்ளத்தின் ஆழத்தில் நமக்கு தரப்பட்டுள்ளது - நாம் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள் அல்லவா? ஆனால் அந்த ஆழத்திற்கு, அந்த மூலத்திற்கு நாம் சென்று அதை அகழ்வாராய்ந்து வெளிக்கொணர வேண்டும், உலகிற்கு வெளிப்படுத்திட வேண்டும், நமது வாழ்விற்கு வழிகாட்டியாக்கிட வேண்டும், அடுத்தவரின் வாழ்விற்கு விளக்காக்கிட வேண்டும். 

மூலக்கருவிலிருந்து நம் வாழ்வை வாழ்வது என்பது நமது உண்மையான மூலம், கரு , உரு, பலம் அறிந்து வாழ்வதாகும். நமது மூலம் இறைவன், நமது கரு இறைவார்த்தை, நமது உரு தூய ஆவி, நமது பலம் இறைவனோடு நமக்குள்ள உறவு... இவற்றை உணர்ந்து வாழ்ந்திட முற்படுவோம்!

No comments: