Tuesday, July 31, 2018

நம்பிக்கையில் அகலும் இரவுகள்

ஆகஸ்ட் 1, 2018: எரே 15: 10,16-20; மத் 13: 44-46


முதல் வாசகத்தில் இன்று இறைவாக்கினர் எரேமியாவை காணும்போது நமக்கே உள்ளம் கலங்கிவிடுகிறது. இறைவனுக்கென்றே வாழ்ந்த அவருக்கு ஏன் இத்தனை துன்பங்கள் என்று அவர் மீது இரங்கத்தோன்றுகின்றது. அவரும் தன்னையே நொந்துக் கொள்கிறார்... தான் ஏன் பிறந்தேன் என்று வேதனைப்படுகிறார். எத்தனை பேர் இவ்வாறு இன்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்... அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்! நம்மில் சிலரும் கூட இப்படிப்பட்ட மனநிலையோடு இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கலாம்! துன்பங்கள், துயரங்கள், கடன், குழப்பங்கள், உடல்நிலை கேடு, மனநிலை தடுமாற்றம், உறவுகளில் விரிசல்கள், புரிதலின்மை, தவறான புரிதல்கள், சண்டைகள், சச்சரவுகள், என பல நிலைகளில் இருள் நம்மை சூழ்ந்திருக்கலாம்... ஆனால் எரேமியாவுக்கு இருந்த அந்த தெளிவு நம்மிடம் உள்ளதா? எங்கிருந்து வந்தது அந்த தெளிவு? 

எத்தனை துன்பங்கள் வந்தாலும், எத்தனை தோல்விகள் அடைந்தாலும், எவ்வித இருள் என்னை சூழ்ந்தாலும் நான் வீழ்ந்துவிடேன்! ஏனெனில், என் ஆண்டவர் என்னோடிருக்கிறார்... அவர் மீதுள்ள நம்பிக்கையில் இந்த இருள் சூழ்ந்த இரவுகள் கடந்து போகும், அருள் நிறை காலங்கள் என்னை வந்தடையும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது. ஆண்டவர் என் சார்பாய் இருக்கும் போது எனக்கெதிராக இருப்பவர் யார் (உரோ 8:31), என்று சூளுரைத்த பவுலடிகளாரை போல, பல புனிதர்களை நாம் இந்த நாட்களிலே சந்திக்கவிருக்கிறோம்... நேற்று நாம் கொண்டாடிய இஞ்ஞாசியார், இன்று நாம் நினைவுகூரும் அல்போன்சு லிகோரியார், இன்னும் இவ்வார  இறுதியில் வரும் மரிய வியான்னி என்று அனைவருமே இந்த வாழ்க்கை முறையை நமக்கு முன்மொழிகிறார்கள்!

நிலத்தடியில் மறைந்து கிடந்த புதையலை கண்டடைந்தாற்போல், உலகறியா விலையுயர்ந்த முத்தொன்றை கையிலேந்தியதுபோல் உணர்ந்தார் எரேமியா - ஒரு இறைவாக்கினனின் முழுமையான மனநிலை அது. நாம் ஒவ்வொருவரும் அத்தகையதொன்றையே கண்டடைந்துள்ளோம்: நமது நம்பிக்கை. அது நமது இரவுகளையும் இருளையும் இல்லாமலாக்கும் அரிய ஆற்றல் கொண்டது. அதை நாம் உணர்ந்திருக்கிறோமா? இறைவன் என் பக்கமிருக்க, யார் எனக்கெதிராக இருந்தால் எனக்கென்ன, என்று துணிந்து வாழும் கிறிஸ்துவர்களாய் உருவெடுப்போம்! 

No comments: