ஆகஸ்ட் 11, 2018: அப 1:12 - 2:4; மத் 17: 14-20
நேர்மையுடடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.
நம்பிக்கை... நம்பிக்கை நம்மிடம் இருந்தால் நம்மிடம் அனைத்தும் உள்ளன. ஆனால் அனைத்தும் இருந்தும் நம்பிக்கை நம்மிடம் இல்லையென்றால், முழுமைபெற ஏதோ ஒன்று நம்மிடம் குறையாகவே உள்ளது என்பதை நாம் உணர்கிறோம். இதையே கிறிஸ்து தன் சீடர்களிடம் வெளிப்படையாய் எடுத்துரைக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் 'உம் சீடர்களால் இதை செய்ய முடியவில்லை' என்று சுட்டிக்காட்டும் தந்தையை போல, இன்றும் நம்மை நோக்கி பலரும் பலவகையில், நமது குறையை சுட்டிக்காட்டக்கூடும். நீங்கள் கிறிஸ்துவின் சீடர்கள் என்கிறீர்கள் இதை உங்களால் சாதிக்க முடியுமா, கிறிஸ்துவர்கள் என்று உங்களையே அழைத்துக்கொள்ளும் உங்களால் உங்களையே பாதுகாத்து கொள்ள முடியவில்லை நீங்கள் எப்படி உலகை மீட்கப்போகிறீர்கள், கடவுளின் மகனை பின்செல்பவர்கள் என்று கூறிக்கொள்கிறீர்களே உலகில் இவ்வளவு தீமை நடக்கும் போது உங்கள் கடவுள் எங்கே பதுங்கியுள்ளார், என்றெல்லாம் பல கேள்விக்கணைகள் நம்மை நோக்கி வரலாம். இவற்றை ஏற்க மறக்கவேண்டாம், அதே சமயம் அவற்றை கண்டு நடுங்கிடவும் வேண்டாம். நமது நம்பிக்கையின் உண்மையான ஆற்றல் என்னவென்று நமக்கு உணர்த்தும் கேள்விகள் இவை. இந்த நம்பிக்கை கடுகளவு நம்மிடம் இருந்தால், இந்த உலகிற்கும், உள்ள படைப்புக்கள் அனைத்திற்கும் எவ்வளவு நன்மை நாம் செய்யலாம்!
இறைவாக்கினர் அபகூக்கு இறைவனின் வாக்குறுதிகளை குறித்து நம்மிடம் பேசுகிறார். இந்த வாக்குறுதிகளுக்கு உரியவர்களாக நாம் தகுதி பெற வேண்டுமெனின் நம்மிடம் கடுகளவாவது நம்பிக்கை இருத்தல் வேண்டும் என்கிறது இன்றைய இறைவார்த்தை. நீதி பிறக்க காலம் தாழ்ந்து போகிறது, உண்மை உறங்குவது போல் தோன்றுகிறது, நன்மை ஒவ்வொரு நாளும் சாகடிக்கப்படுகிறது என்று நாம் உணரும் போது நமது ஆன்மா சோர்வடைவது மட்டுமல்லாமல் அவநம்பிக்கையில் சிக்க வாய்ப்பும் உள்ளது, அதை நாம் அறிந்து விழிப்போடிருக்க வேண்டும் என்று நாம் அழைக்கப்படுகிறோம். கட்டாந்தரையாய் இருக்கும் நிலமொன்றை துளைத்துக்கொண்டு முளைக்கும் சிறு துளிரை போல நமது நம்பிக்கை நமக்கு புதுவாழ்வு தரும் என்று நாம் நம்ப வேண்டும்.
ஆம், கடுகளவு நம்பிக்கை இருந்துவிட்டால் நம்மிடம் ஆற்றல், மனதிடம், துணிச்சல், எதையும் தாங்கும் நெஞ்சுரம், துவண்டுவிடா மனநிலை, இடைவிடா முயற்சி ஆகியவை பிறந்துவிடும், நாமும் புதுவாழ்வு பெறுவோம்! ஏனெனில், நம்பிக்கையினால் நேர்மையாளர் வாழ்வடைவர்.
No comments:
Post a Comment