Sunday, August 5, 2018

விடிவெள்ளிக்கு முன் விளக்காக!

ஆகஸ்ட் 6, 2018: ஆண்டவரின் உருமாற்ற விழா 

தானியேல் 7: 9-10, 13-14;  2 பேதுரு 1: 16-19; மத் 17: 1-9

தாபோர் மலையிலுள்ள உருமாற்றத்தின் 
ஆலயத்தின் கூரையின் உட்புறத்திலுள்ள ஓவிய அமைப்பு
 

பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்று, என்று தூய பேதுரு நமக்கு அளிக்கும் ஒப்புமை நமது கிறிஸ்தவ வாழ்விற்கு முற்றிலும் தகுந்த ஒப்புமையாக விளங்குகிறது. நமது நம்பிக்கை, நமது சாட்சிய வாழ்வு, இறைவன் மீது நமக்குள்ள எதிர்நோக்கு, இறையரசை நோக்கி நாம் காட்டும் அர்ப்பணம் என அனைத்தையுமே அது மிக துல்லியமாக குறித்து காட்டிவிடுகிறது. இன்னும் ஆழமாய் சென்று நமக்காக காத்திருக்கும் இறைவனின் பிள்ளைகள் என்ற அழியா மகிமையையும் (யோ 1:12), கிறிஸ்துவோடு பங்காளிகள் என்னும் நிலையையும் (உரோ 8:17), மாட்சிமைக்குரிய மக்கள் என்னும் எதிர்நோக்கையும் (உரோ 8:18) அது நமக்கு நினைவூட்டுகிறது. 


உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் முழு பொருளையும் நாம் உணர வேண்டும் என்றால் அதில் அடங்கியுள்ள மறைபொருளை நாம் மறந்துவிட கூடாது. மறைபொருள் என்பது ஏதோ மறைந்து கிடக்கின்ற ஒரு பொருள் என்று நாம் புரிந்துகொள்ளாது, நம்  வாழ்நாள் எல்லாம் நிறைந்து கிடக்கின்ற ஒரு உண்மை என்று நாம் உணர வேண்டும். அதை எடுத்துக்காட்டவே கிறிஸ்து தனது சீடர்களுக்கு இன்றைய அனுபவத்தை தருகிறார். வாழ்க்கை என்பது நாம் வெளித்தோற்றமாய் காண்கின்றவை மட்டுமல்ல, அதை தாண்டி உண்மையின் ஆழத்தில் பலவற்றை நம்மால் உணரமுடியும், அனுபவிக்க முடியும், பகிர முடியும், பற்றி கொள்ள முடியும் என்று நாம் உணர வேண்டும். 

கிறிஸ்துவின் உருமாற்ற நிகழ்வு இதையே சீடர்களுக்கு எடுத்து கூறியது, நமக்கும் எடுத்து கூறுகிறது. இதற்காக வெறும் கற்பனைகளிலும் இல்லாத ஒன்றை ஊகிக்கும் போக்குகளிலும் நமது வாழ்வை நாம் வீணடித்துவிட கூடாது. அன்றாட வாழ்வை முழுமையாய் வாழ்ந்து கொண்டே, இந்த வாழ்வு உண்மையில் நம்மை எங்கு அழைத்து செல்கிறது என்பதை மறந்துவிடாது எதிர்நோக்கோடும் அகன்ற பார்வையோடும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று இறைவார்த்தை நம்மை அழைக்கிறது. 

உருமாற்றத்தின் மக்கள், உள்ளதையும் அதை தாண்டிய உண்மையையும் உணர்ந்தவர்களாக, தங்கள் கண்கள் விண்ணிலும் தங்கள் கால்கள் மண்ணிலும் பதிய வாழ்பவர்களாவர். ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை முழுமையாய் வாழ்ந்து, அதை இறைவனுக்காக, இறையரசிற்காக வாழ்கிறோம் என்று உணரும்போது, நாமும் உருமாற்றத்தின் மக்களாய் உருவெடுக்கிறோம்! பொழுது புலர்ந்து விடிவெள்ளி அனைவர் இதயங்களில் தோன்றும்வரை இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்று நமது வாழ்வு என்றும் இவ்வுலகில் ஒளிரட்டும்!


No comments: