Monday, August 6, 2018

காத்திருத்தலே நம்பிக்கை

ஆகஸ்ட் 7, 2018: எரே 30: 1-2,12-15,18-22; மத் 14: 22-36


காத்திருத்தல் என்பது மக்களுக்கு சாதாரணமாக எரிச்சலூட்டும் தருணமாகவே உள்ளது. சாலை ஒழுங்காக இருக்கட்டும், வாகன நெரிசலாக இருக்கட்டும், பொது இடங்களில் வரிசைகளாகட்டும், பொது போக்குவரத்திற்கு நின்றிருக்கும் நேரமாகட்டும்... இவை அனைத்துமே மக்களை பொறுமை இழக்கவும், அங்கலாய்க்கவும் செய்கிறது. ஆனால் இறைவனை பொறுத்தமட்டில், மன அமைதிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் காத்திருப்பதை தவிர்த்து வேறு எந்த வழியும் நமக்கு இல்லை! ஏனெனில் இறைவனின் இருத்தல் கால நேரத்திற்குள் அடங்காத ஒன்றாகும்... அவரை பொறுத்தவரை ஆயிரமாண்டு ஒரு நாள் என்று நாம் படிப்பது இதை தானே! இறைவன் முதலும் முடிவும் அற்றவராய் மட்டுமல்ல, கடந்தவை நிகழ்பவை என்ற வேறுபாடற்று இருக்கிறார்.

எரேமியா இன்று நம்மிடம் இறைவன் செயல்படும் காலம் நெருங்கிவிட்டது என்று கூறும்போது, அந்த நெருக்கத்தை நாம் ஏதோ இன்றோ நாளையோ என்று பொருள் கொண்டால் அது குழப்பம் தரும். இறைவனுக்கு எதிராய் தங்கள் மனம் போன போக்கில் பேசியவர்களை எல்லாம் சாடிய எரேமியா இறைவன் தனக்கே உரிய நேரத்தில் நமது வாழ்வின் பொருளை நாம் உணர செய்வார் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். 

கிறிஸ்துவும் இதையே வேறு வகையில் நமக்கு நினைவுறுத்துகிறார்... புயல் சூழ்ந்தாலும், இருள் படர்ந்தாலும், பகைவர் உன்னை நெருக்கினாலும், எந்த நேரத்திலும் உன் மனதை இழந்துவிடாதே... இறுதி வார்த்தை கடவுளுடையதாகவே இருக்கும்! அந்த இறுதி வார்த்தை வரை நாம் காத்திருத்தல் வேண்டும்... இந்த காத்திருத்தலே நம்பிக்கை!

நமது பொறுமை இழந்துவிடாமல், இறைவன் மீதுள்ள பற்று குறைந்துவிடாமல், மன உறுதி மங்கிவிடாமல், இறைவன் மீது பதித்த கண்களை ஒருபோதும் எடுத்துவிடாமல், பிடித்த அவரது கைகளை எந்நேரத்திலும் விட்டுவிடாமல் காத்திருத்தலே நம்பிக்கை!


No comments: