Monday, October 15, 2018

சுதந்திரமும் கீழ்படிதலும்

அக்டோபர் 15, 2018: அவிலா தெரசம்மாள் - நினைவு 

கலா 4:22-24,26,27,31 - 5:1; லூக் 11: 29-32

தனி மனித சுதந்திரம் என்பது இறைவன் நமக்கு தரும் கொடைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும், ஏனெனில் இதுவே நம்மை மற்ற உயிரினங்களிடமிருந்து பிரித்து காட்டுகிறது. இதனாலேயே இது வெறும் கோடை மட்டுமல்ல, பெரும் பொறுப்பாகவும் விளங்குகிறது. நமது சொல் செயல் சிந்தனை அனைத்திற்கும் நாம் யார் மீதாவது பழிபோட நினைத்தாலும் இறுதியில் பொறுப்பு நாம் மட்டுமே! நமது நம்பிக்கை வாழ்விலும் அவ்வாறே நமது நல்வாழ்விற்கும் வரையறையற்ற வாழ்விற்கும் நாமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்... சுதந்திரம், உரிமை என்றெல்லாம் இன்று பல வகைகளில் பிதற்றுபவர்கள், உண்மையிலே இந்த சுதந்திரத்தையும் உரிமையையும் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது ஐயமே! 

சுதந்திரத்தின் வசதிகள் வேண்டும் ஆனால் அதற்கு நாம் அளிக்க வேண்டிய விலையாம் நமது கடமையும் பொறுப்பும் வேண்டாம் என்று கூறுபவர்கள் தான் அதிகம்  காணப்படுகிறார்கள். நம்பிக்கை தரும் அருள் வேண்டும் ஆனால் அதற்காக நான் தர வேண்டிய கீழ்ப்படிதல் என்ற விலை எனக்கு வேண்டாம் என்று கூறும் மடமை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இன்று நாம் கொண்டாடும் அவிலா தெரேசம்மாள் தன் காலத்திலே துறவற வாழ்வின் தன்மையை இறைவன் விரும்பிய நிலைக்கு மீண்டும் கொண்டுவர செய்த மாபெரும் செயல்கள் திருச்சபையின் வரலாற்றில் மறக்க முடியாதவை. அவரது செயல்களை எல்லாம் பெரும் செயல்களாய் மாற்றியது இறைவனின் பால் அவரது கீழ்ப்படிதலே... இது கட்டாயத்தின் பேரிலோ, வேறு வழியின்றியோ ஏற்பட்ட கீழ்படிதலென்றால் எந்த மாற்றத்தையும் உருவாக்கியிருக்காது. ஆனால் முழு சுதந்திரத்திலே பிள்ளைக்குரிய உரிமையில் பிறந்த கீழ்ப்படிதல் என்பதால் பல புதுமைகளை அது நிகழ்த்தியது!

நமது சுதந்திரத்தை உணர்வோம், நன்றி கூறுவோம், பிள்ளைகளுக்குரிய உரிமையோடு இறைவனுக்கு முற்றிலுமாய் கீழ்ப்படிய முன்வருவோம்!

No comments: