Monday, October 15, 2018

நம்பிக்கையும் அன்பும்

அக்டோபர் 16, 2018: கலா 5:1-6; லூக் 11:37-41



சுதந்திரமும் கீழ்ப்படிதலும் என்று நேற்று சிந்தித்தோம்... இன்று வேறு இரண்டு நற்கூறுகள் நம் சிந்தனைக்கு தரப்படுகின்றன. நம்பிக்கையும் அன்பும்! இவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரியாமல் இருக்க வேண்டியவை: அன்பில்லாத நம்பிக்கை வீண், நம்பிக்கையில்லாத அன்பு நிலையற்றது! 

பரிசேயர் ஒருவர் கிறிஸ்துவை வீட்டிற்கு அழைக்க, யார் எவர் ஏன் என்றெல்லாம் எண்ணாமல் இசைந்து அவரோடு செல்கிறார் கிறிஸ்து. ஆனால் அங்கு சென்ற போது, விருந்தோம்பலின் மகிழ்ச்சி குறை கூறுவதிலும், நட்பின் நெகிழ்ச்சி சட்ட சம்பிரதாயங்களிலும், அன்பின் மலர்ச்சி வெறும் வெளிவேடத்திலும் காணாமலே போகிறது! 

நம்பிக்கை என்பது கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியுள்ளார் என்பதை உணர்வதில் அடங்கியுள்ளது என்பதை பவுலடிகளார் நமக்கு தெளிவுபடுத்துகின்றார். இந்த விடுதலை வெறும் வாய் வார்த்தையிலோ அல்லது வெளி தோற்றத்திலோ உணரப்படுவது மட்டுமல்ல, உள்ளார்ந்த எனது சிந்தனையிலும், முடிவுகளை மதிப்பிடும் விதத்திலும் வெளிப்படுகிறது. சட்டதிட்டங்கள், அடுத்தவரின் அபிப்பிராயங்கள், பிறருக்கு நான் தரவிரும்பும் என்னை பற்றிய புரிதல்... இவையெல்லாம் என்னை இன்னும் சிறைபிடித்து வைக்கக்கூடிய கூறுகள் என்பதை நான் உணரவேண்டும். நம்பிக்கையிலே இறைவன் முன்னிலையில் நான் எப்படி இருக்கிறேன் என்பது மட்டுமே அவசியமானது, மாற்றம் தரக்கூடியது, என் அடையாளத்தை நிர்ணயிக்க கூடியது என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா, என்பதே இன்றைய வார்த்தை நம்மிடம் கேட்கும் கேள்வியாகும். 

உண்மையான அன்பு அடுத்தவரை தீர்ப்பிடாது ஏற்றுக்கொள்ளும் தன்மை; அது யார் என்று தரம் பிரிக்காது உணரப்படும் உள்ளார்ந்த நல்லெண்ணம். இந்த அன்பும் நம்பிக்கையும் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில கிறிஸ்து வாழ்கிறார்!  அன்பற்ற நம்பிக்கை வெறும் சட்டதிட்டங்கள் அடிமைகளை அடையாள படுத்தும். நம்பிக்கையற்ற அன்பு வெகு தூரம் செல்லாது, பாதியிலே அயர்ந்து உலர்ந்து போய்விடும்! உண்மை அன்பும் உள்ளார்ந்த நம்பிக்கையும் நம்மில் நிலைத்து விட்டால், கிறிஸ்து அங்கு உயிரோடு வாழ்வதை காணாமல் இருக்கமுடியாது!

No comments: