Sunday, October 21, 2018

நாளையை எண்ணி இந்த நாளை வீணடிக்கும் நாம்

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் - நினைவு 

அக்டோபர் 22, 2018: எபேசியர் 2:1-10; லூக்கா 12: 13-21

வாழ்வு என்பது ஒரு கொடை, நான் கேட்காமலேயே அதற்காக உழைக்காமலேயே நமக்கு கிடைத்த ஒரு கொடை. இந்த வாழ்வு முழுமையாக முதிர்ச்சியோடு வாழப்பட வேண்டிய ஒன்று என்பது நாமறிந்ததே. ஆனால் இன்றைய சமூக போக்கை நாம் உற்று நோக்கினால் அங்கு நாளைய வாழ்வு எப்படி அமைய போகிறது என்ற கவலையிலேயே பல இன்றுகள் கடந்துவிடுவதை நாம் காண்கின்றோம்!  பலமுறை யூதன் முதலாய் ஒரு நல்ல இடத்தையோ காட்சியையோ காணும் போது அதை புகைபடமெடுத்து நாளைய நினைவுக்கு சேகரிப்பதில் நாம் காட்டும் கவனத்தை அன்று, அங்கு, அந்த நேரத்தின் மகிமையை, அழகை உள்வாங்கவோ முழுமையாய் உணர்ந்திடவோ நாம் காட்ட மறந்துவிடுகிறோம். நாளையை பற்றி கவலை பிற்காலத்தை பற்றிய பயம் பல வேளைகளில் நம் மனதில் ஆழமாய் இடம் பிடித்து உள்ள தருணத்தின் பொருளை உணராமல் தவறவிட செய்கிறது. 

ஒருமுறை ஒரு குடும்பத்தின் இரண்டு சிறுபிள்ளைகளை சந்தித்தபோது, சிறியவன் மிக மகிழ்ச்சியாகவும் பெரியவன் சற்று சோகமாகவும் இருந்ததை கவனித்தேன்... ஏன் என்று கேட்டபோது அவர்கள் சொன்ன காரணம் ஒன்று தான். அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மகிழ்ச்சி  என்றான் சிறியவன். மூன்று நாட்கள் கழித்து பள்ளி சென்றால் தனக்கு தேர்வு என்பதால் வருத்தம் என்றான் பெரியவன். நமக்கு ஏற்படும் சில ஏமாற்றங்கள், கடினமான சூழல்கள் என்று ஒரு சிலவற்றால் இருக்கக்கூடிய பல நல்ல அனுபவங்களை நாம் முற்றிலும் விணடித்துவிடுகிறோம் அல்லவா! 

நாம் கடவுளின் கையிலிருந்து இந்த வாழ்வை கொடையாய் பெற்றிருக்கிறோம், அதை முழுதுமாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உண்மையிலே உணர்ந்தோமென்றால் நாளையை பற்றிய கவலைகளோ, நடக்காதது பற்றிய வருத்தங்களோ சற்று விலகி நின்று, இன்று, இந்த தருணம் ஆகியவற்றின் பொருளை நாம் புரிந்துகொள்ள இயலும். இன்று நாம் நினைவுகூரும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உண்மையிலே ஒரு தற்காலத்திற்குரிய புனிதராவார். நமது சூழலும் அவரது சூழலும் அவ்வளவு வேறுபட்டது அல்ல. அத்தனை கட்டுப்பாடுகள், ஒடுக்குமுறைகள் நடுவே வளர்ந்தவர் அவர். ஆனால் ஒருபொழுதும் தன் நேர்மறை சிந்தனைகளை இழக்காமல், மக்களை அன்பு செய்வதிலும், சிறப்பாக இளம்சமுதாயத்தை அன்பு செய்வதிலும், இறைவனிடம் மக்களை ஈர்ப்பதிலும் தன வாழ்க்கையை முழுமையாய் அர்ப்பணித்தார். தன வாழ்வின் இறுதி நாட்களில் அவர் பட்ட துன்பங்களையெல்லாம் எப்படிப்பட்ட மனதிடத்தோடு எதிர்கொண்டார் என்பதை நம்மில் பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம் அன்றோ! 

இறுதியாய் விஞ்சி நிற்பது ஒரே வினா தான்: அன்பிலே இன்னும் ஆழப்பட நாம் தயாரா? இன்னும் அதிகமாக அடுத்தவருக்காக சிந்திக்க நாம் தயாரா? இன்னும் இரக்கமுள்ளவர்களாக  வளர நாம் தயாரா? இன்னும் நம் உண்மை இயல்பை உணர்ந்தவர்களாய் வாழ நாம் தயாரா? இன்னும் அதிகமாய் கடவுளுக்கு நெருங்கி வர நாம் தயாரா!

No comments: