Thursday, October 25, 2018

ஒரே மனம் ஒரே இனமென ...

அக்டோபர் 26, 2018: எபேசியர் 4: 1-6; லூக்கா 12: 54-59



இன்றைய சூழலில் நாம் எங்கு பார்த்தாலும் போட்டியும் பொறாமையம், பழிவாங்கும் நோக்கும் குழி பறித்திடும் எண்ணமும் தான் அதிகமாய் காணப்படுகிறது. இத்தகைய உலகத்தில் இறைவனின் மக்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்வோரின் நிலைப்பாடும் வாழ்க்கை முறையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது நாமறிந்ததே. இந்த உலகில் உள்ள பிரச்சனைகளோடு நாமும் ஒரு பிரச்சனையை சேர்த்து உருவாக்குபவர்களாகவோ, இருக்கும் பிரச்சனைகளுக்கும் நமக்கும் ஒரு தொடர்பும் இல்லாதது போல் செல்பவர்களாகவும் நாம் இருந்தோமெனில், 'வெளிவேடக்காரர்களே' என்று கிறிஸ்து சாடும் அந்த வார்த்தைகள் நமக்கும் சால பொருந்தும். 

சில நேரங்களில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் சில உரையாடல்களை காணும் போது, ஒரு சிலரின் வாக்குவாதங்கள் நமக்கு ஒரு கூற்றை மிக தெளிவாக உணர்த்துகிறது - நாம் உறங்குபவர்களை எழுப்பிவிடலாம், உறங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. தங்களை சுற்றி நடப்பதற்கு காரணமும் அதன் தீர்வும் என்னவென்று மிகத்தெளிவாக தெரிந்தும், தங்களுக்கு பிடித்தவர்கள், "தங்கள் ஆட்கள்" என்ற சில காரணங்களால் இதை உணராதவாரே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

இன்று நற்செய்தியில் கிறிஸ்து பரிசேயர்களை வெகுவாய் கடிந்துகொள்கிறார், காரணம் அவர்கள் சரியானது எது என்று அத்தனை தெளிவாய் அறிந்திருந்தும் அதை தேர்ந்துகொள்ளாமல் இருந்தததே. நாம் மேல்கூறிய அந்த முகநூல் நண்பர்களை போல! இன்று உலகிலும் நம் நாடுகளிலும் நமது சமுதாயத்திலும் உள்ள பிரச்சனைகளில் பெரும்பான்மை, ஒற்றுமையின்மை என்ற கோணத்திலே காணும்போது நமக்கு இன்னும் தெளிவாய் விளங்கும். தன்னலமிக்க சிந்தனைகள், அடுத்தவரை குறித்த முற்சாய்வு எண்ணங்கள், முன்னேற்றம் என்ற ஒரு நிலைக்காக எதையும் யாரையும் தியாகம் செய்யும் மனநிலை, அடுத்தவரை ஏமாற்றவும் பயன்படுத்தவும் அவர்களிடமிருந்து முடிந்தவரை சுரண்டிடவும் தயாராக இருக்கும் இழிநிலை... இவை எல்லாமே வெளிவேடக்காரர்களின் அடையாளம் தான். தமக்கென்று ஒரு சட்டம் அடுத்தவருக்கோ வேறு சட்டம் என்று வேடமிட்டு வாழ்பவர்கள் இவர்கள். இறையாட்சியில் இவர்கள் நுழைவதென்பது எத்தனை அரிது. இவர்களை தீர்ப்பிடுவதற்கு முன், ஒருவேளை நானும் இந்த வரிசையில் இருக்கிறேனா என்று என்னையே நான் கேட்டுக்கொள்ள வேண்டும்.

விழித்துகொள்வோம், அழைப்பை உணர்வோம், ஒருமனப்படுவோம், ஒரு மக்களாய், ஒரே உள்ளம், ஒரே மனம், ஒரே இனம், ஒரே மனிதம், என்று ஒரே இறைவனால் இணைக்கப்பட்டவர்களாவோம்; இந்த உலகிற்கு அன்பினால் பாடம் புகட்டுவோம், சாட்சியமாவோம். நம் ஆழ்மன சிந்தனைகளிலிருந்து இந்த மாற்றத்தை தொடங்குவோம்.

No comments: