Thursday, October 4, 2018

இறைசித்தத்திற்கு சரணாவோம்; புதுமைகள் காண்போம்!

அக்டோபர் 5, 2018 - யோபு 38: 1, 12-21, 40; லூக் 10: 13-16

கடவுள் நமக்காக செய்யும் அரும்பெரும் செயல்களை நாம் பொதுவாக காண்பதே இல்லை, கண்டாலும் அதன் அருமையை நாம் உணர்வதே இல்லை. பெரிய நிகழ்வுகள், உயிர் காக்கும் அனுபவங்கள், வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வுகள் என்று சிலவற்றை மட்டுமே நாம் நினைவில் வைத்துக் கொள்ள முன் வருகிறோமே தவிர அன்றாடம் நடக்கும் புதுமைகள், அன்றாடம் நமக்கு கிடைக்கும் பல கொடைகள், சத்தமின்றி நிகழும் சாதாரண அனுபவங்களிலெல்லாம் இறைவன் நம்மை எப்படியெல்லாம் வழி நடத்துகிறார் என்பதை நாம் காண தவறிவிடுகிறோம். இதனால் தான் ஒரு பிரச்சனையோ துன்பமோ வரும் போது அதுவரை நாம் அனுபவித்த எந்த ஆசீரையும் மனத்திற்கொள்ளாமல் புலம்ப தொடங்கிவிடுகிறோம். 

மனிதர்களுக்கு இடையேயான அன்றாட உறவுகளிலும் இந்த அனுபவத்தை நான் கண்டதுண்டு... ஒரு மனத்தாங்களோ புரிதலின்மையோ வந்துவிட்டால் தொடக்க காலத்திலிருந்தே எதிரிகளை போல சண்டையிட்டுக்கொள்ளும் இருவர், தாங்கள் பகிர்ந்துகொண்ட அழகான தருணங்களை நினைத்து பார்ப்பதே இல்லை. அதை நினைத்துக்கொண்டாலே  பாதிக்கும் மேலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதே உண்மை. 

இறைவனோடு நமது உறவிலும் அவ்வாறே, நாம் ஒரு சோதனைக்குரிய தருணத்தை தாண்டி செல்லும் போது, வலுவிழக்கச்செய்யும் நேரத்தை கடந்துசெல்லும்போது, நமது வாழ்வின் அருமையான நேரங்களை, இறைவனோடு நாம் அனுபவித்த அற்புதங்களை நினைத்துக்கொண்டோமேயானால், அந்த நேரத்திற்கான ஒளி பிறக்கும். குறுகிய கண்ணோக்கோடு, புரிதலற்ற மனதோடு இறைவனை குறை சொல்வதும், அவரது சித்தத்தை எதிர்த்து சிந்திப்பதும், நமது அறிவீனத்தையே காட்டுகிறது என்று யோபு தனது அனுபவத்திலிருந்து நம்மை உணரச்செய்கிறார்.

இறைவன் நமக்கு செய்த நன்மைகள், அவர் நமக்கு காட்டிய வழிகள், நமது நலனுக்காக அவர் செய்த பெரும் செயல்கள், நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள் என இவற்றையெல்லாம் நாம் மனதிற்கொண்டு வாழும் போது நமது வாழ்வு இறைசித்தம் என்னும் பரந்த எல்லைக்குள் தெளிவு பெறுகிறது. இல்லையேல் நான், எனது எண்ணம், எனது திட்டங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கி திணறுகிறது. 

இறைசித்தத்திற்கு சரணாவோம்; புதுமைகள் காண்போம்!

No comments: