Monday, January 15, 2018

சனவரி 16: கடவுள் மட்டுமே

மாற்றம் காணாதது என்று வரலாற்றில் உண்டோ?


மாற்றம் காணாதது என்று ஏதேனும் வரலாற்றில் உண்டா என்று ஆய்ந்து பார்த்தோமேயானால், வெறுமையே மிஞ்சும். ஏனெனில் எல்லாம் மாறும்... இன்றுள்ள ஆட்சிகள் நாளை இருக்கமாட்டா. இன்றுள்ள ஆதிக்கங்கள் நாளை மறைந்து போவன. புகழும் பாராட்டும் காற்றில் கலந்துவிடுவன. ஆனால் அனைத்தையும் மாற்றக்கூடியவராய், தன்னிலே எந்த மாற்றமும் இல்லாதவராய் இருப்பவர் கடவுள் மட்டுமே. 

முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களின் இரண்டாம் அரசனுக்கான தேர்வு தொடங்குவதை நாம் கேட்கின்றோம். அத்தனை ஆரவாரங்களுடன் அரசனான சவுல்  வரலாற்றிலே நகர்ந்து செல்லும் நேரம் வெகு விரைவில் வந்துவிட்டது. நம் வாழ்விலும் நிலையானதொன்றும் இல்லை என்பதை புரிந்து வாழும்போது உண்மைகள் நமக்கு விளங்க ஆரம்பிக்கின்றன. 

கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவன் தான் சவுல்...எனினும் கடவுள் அவனை மாற்றுகிறார் - மாற்றியது கடவுள் என்பதை விட மாறியது அவன் என்பதே சரி. மாறாத கடவுளின் மனதின் படி வாழும் போது நமது வாழ்வும் மாறாத அர்த்தம் பெரும். மாறக்கூடியவைகளில் நமது ஆதாரம் அமைந்தால், நமது வாழ்வும் அதன் பொருளும் கூட மாறிக்கொண்டே இருக்கும். 

ஆழமான பொருள்மிக்க கொடை நமது வாழ்வு. இவ்வாழ்வை இறைவனை ஆதாரமாய் கொண்டு அமைத்தோமேயானால், அதன் உண்மை பொருள் துலங்குகின்றது. நிலையில்லாத உலக போக்கின்படியும், மாறக்கூடிய சமுதாய அளவைகளின்படியும் அமைத்தோமேயானால் வெகு விறைவில் வெறுமையாகிவிடும்.  வாழ்வின் உண்மை ஆதாரமாய் அமைய கூடிய ஒரே உண்மை கடவுள் மட்டுமே என்பதை புரிந்து கொள்வோம். நம் வாழ்வை காத்துக்கொள்வோம். 

No comments: