Monday, January 22, 2018

சனவரி 23: இறைசித்தம் செய்ய - ஏன்?

சனவரி 23: இறைசித்தம் செய்ய - ஏன்?

நான் ஏன் இறைசித்தம் செய்ய வேண்டும்?


இறைவனின் சித்தத்தை செய்வது என்பது நமது கடமை மட்டுமல்ல நாம் என்றுமே சரியான வழியில் செல்வதற்கான உத்தரவாதமும் அதுவே. அனால் இறைசித்ததை செய்வதற்கு பல்வகையான காரணங்கள் இருக்கக்கூடும். 

முதலாவது, இறைசித்தம் செய்யாது போனால் எனக்கு ஏதாவது இழப்பு நேரிடும், இடர் வந்து சேரும் என்ற பய உணர்வாக இருக்கலாம். இங்கு நமக்கேன் வம்பு என்ற தப்பிக்கும் எண்ணமே விஞ்சி நிற்கின்றதே ஒழிய இறைவன் பால் உள்ள நம்பிக்கை அல்ல.

இரண்டாவதாக, இது இறைசித்தம், இதை தான் நான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறேன். ஆகவே அதையே நான் செய்வது எனக்கு நலம். இது என் கடமை, வேறு வழி இல்லை. சிறு வயதிலிருந்து என்னை இப்படி தான் வளர்த்திருக்கிறார்கள். இதுவே என் வழக்கமாகவும், பழக்கமாகவும் ஆகிவிட்டது எனவே இதை செய்கிறேன் என்று நாம் வாதிடலாம். இதில் பாராட்டப்பட கூடிய ஒரு நல்லொழுக்கம் இருக்கிறது என்பது உண்மையானாலும், எந்திரமயமானதொரு கீழ்ப்படிதலே இங்கு விஞ்சி நிற்பதை நம்மால் காணமுடிகிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் தாவீதும், நற்செய்தி வாசகத்தில் கிறிஸ்துவும் நமக்கு தரும் பாடம் என்னவென்று சற்று உற்று நோக்குவோம். கடவுளின் சித்தத்தை செய்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது ஏனெனில் நான் அவரை நேசிக்கிறேன். அவரது அன்பு எவ்வளவு ஆழமானது என்று நான் அறிந்துள்ளேன், அவ்வன்பு என் நல்லதையே என்றும் சிந்திக்கும்  என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவரது சித்தத்திற்காக எத்தனை துன்பங்களையும் ஏற்க நான் தயாராக உள்ளேன் ஏனெனில், என் வாழ்வில் நடக்க கூடிய எல்லாவற்றிலும் சிறந்தது அவரது சித்தமே! 

என்னை அனுப்பினவரின் சித்தத்தை செய்வதே எனக்கு உணவு என்று வாழ்ந்த கிறிஸ்துவை போலவே இறை சித்தத்தை அன்போடு ஏற்கும் போது தான் நான் கிறிஸ்துவின் சகோதரனாக சகோதரியாக நண்பராக மாறுகிறேன், அதாவது கடவுளின் உண்மை மகனாக மகளாக பிறக்கிறேன். 

No comments: