Sunday, October 28, 2018

நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்...

அக்டோபர் 29, 2018: எபேசியர் 4:32 - 5:8; லூக்கா 13: 10-17


'நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்', என்று  இன்றைய முதல் வாசகத்திலே நம்மை பார்த்து அறிவுறுத்துகிறார்பவுலடிகளார். ஒளியாய் இருப்பதென்றால் என்ன என்பதையும் தெளிவாய் உணர்த்துகிறார்... கிறிஸ்துவோ அதை நடைமுறையாய் வாழ்ந்து காட்டுகிறார்.   

தனிப்பட்ட வாழ்வில் தூய்மை ஒருவரை இருளின் மத்தியிலே ஒளிரச்செய்கிறது. இன்று உலகம் தவறு செய்வதை குறித்து அஞ்சுவதை விட தவறு செய்து சிக்கிக்கொள்வதை குறித்தே அஞ்சுகிறது. வெறும் மற்றவர் பார்வைக்கும் உலகத்தின் புகழுக்கும் வாழப்படுவது தூய்மையானது!

மனித உறவுகளில் உண்மை ஒருவரை இறைச்சாயல் பெறச்செய்கிறது. தான் என்ற அகங்காரமோ, தனக்கு என்ற சுயநலமோ, தனது என்ற பயன்படுத்தும் மனநிலையோ இல்லாமல் வளரும் உறவுகளில் இறைவனே வாழ்கிறார். ஒருவரை கண்டவுடனேயே அவரகளது தேவை நமது கண்களுக்கு படவேண்டும் தவிர அவர்களது பலகீனம் அல்ல. 

ஆன்மீகத்தில் ஊன்றிய அடையாளம் ஒருவரை இறைவனுக்குரியவர் ஆக்குகிறது. இறைவனின் உருவையும் சாயலையும் தாங்கியவர் என்ற உணர்வு மிகுந்தவராக இறைவனுக்கு உரியவற்றையே செய்யும் வாழ்க்கை முறை அடுத்தவரோடு ஒப்பிட்டு அல்ல இறைவனின் சித்தம் என்னை எதற்கு அழைக்கிறது என்ற தெளிவோடு நடக்கவே என்னை அழைக்கிறது. 

சுருங்க கூறின், தனிப்பட்ட தூய்மை, உறவில் உண்மை, இறையுணர்வு என்னும் இவை என்னை இறைவனின் சாயலாகவே மாற்றுகிறது! நாம் அவரைப்போலவே மாற அழைக்கப்படுகிறோம், ஏனெனில் நாம் அவரது பிள்ளைகளாவோம். கடவுளை போல் மாற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்துவே வாழ்ந்து காட்டியுள்ளார். ஒளியான அவரது வழியில் நடப்போம், ஒளியாய் வாழ்வோம்!

No comments: