Monday, October 8, 2018

நற்செய்தியின் உண்மை சாரம்

அக்டோபர் 8, 2018: கலா 1:6-12; லூக் 10: 25-31


ஒரு முறை கத்தோலிக்கர்களும் கத்தோலிக்கரல்லாதவர்களும் சரிசமமாய் இருந்த ஒரு குழுவிடம் உரையாற்ற நேர்ந்தது... முதலில் தொடங்கிய நான் இந்த கலப்பை எண்ணி சற்று எச்சரிக்கையோடு பேசத்தொடங்கினேன். ஒரு சில நிமிடங்கள் சென்றதும் என் மனத்திற்குள்ளாக இந்த தயக்கத்தை சரிசெய்துகொண்டு, நான் எப்போதும் பேசுவதை போல் மனம்விட்டு பேச ஆரம்பித்தேன். அந்த உரையின் முடிவில் கத்தோலிக்கரல்லாதவர்கள் பலரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து நான் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்காக நன்றி கூறி சென்றனர். யாரிடம் பேசினால் என்ன, நற்செய்தியை சரியாக முறையாக பற்றிக்கொண்டால் போதும் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறையாக நான் உணர்ந்த தருணம் அது!

நற்செய்தியின் உண்மை சாரம் அன்பே! கடவுள் நம்மை அன்பு செய்கிறார், நாம் அன்பு செய்தோமாகில் அவருக்கு சொந்தமானவர்கள் ஆகிறோம். இதை தவிர மற்றனைத்தும் நற்செய்தியை திரிப்பதாகவே அமைகிறது - பிரிவினை, பகை, தன்னலம், ஏமாற்று, அடுத்தவரை பயன்படுத்துதல், அடுத்தவர் பெயரை கெடுத்தல், தீர்ப்பிடுதல், ஏற்றத்தாழ்வு போற்றுதல்... என இவை அனைத்துமே நற்செய்திக்கு எதிரானவை தானே! 

சில நேரங்களில் துன்பம், சிலுவை, தியாகம் என இவை தான் நற்செய்தியின் பேருண்மைகளாக நமக்கு தோன்றலாம், ஆனால் உண்மை அதுவல்ல... இவற்றிற்கும் பொருள் தரக்கூடியதாய் அன்பேயுள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.  துன்பமே வாழ்க்கை, என்பது நேர்மறையான சிந்தனையே அல்ல. ஆனால் அன்பிற்காக துன்பம் ஏற்றல் என்பது ஆழ்ந்த பொருள் தருகிறது. சிலுவையும் கூட அன்பின் பார்வையில் காணப்படாவிட்டால், அது வெறும் தோல்வியின், அவமானத்தின் சின்னமே; ஆனால் அன்பு அந்த சிலுவையை வெற்றியின் சின்னமாக்குகிறது. தியாகமும் கூட அன்பு இல்லையேல் வெறும் தற்புகழ்ச்சியாக, என்னையே நான் முன்னிறுத்துவதற்கான கருவியாக மாறிவிடும். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் பாடங்களாகும் - இதைக்காட்டிலும் வேறு நற்செய்தி என்று ஒன்றில்லை என்கிறார் பவுலடிகளார். 

தேவையில் இருக்கும், துன்பப்படும், யாருமின்றி நிற்கும் ஒவ்வொருவரும் என் அயலானாகிறார்; சகோதரராகின்றார். அடுத்தவரின் தேவையும், துன்பமும் அறிந்து கரம் நீட்டும் மனம் என்னில் உள்ளதா? அல்லது யார், எவர், ஏன், எனக்கென்ன பயன் என்ற எண்ணங்களே என்னில் மேலோங்கி நிற்கின்றனவா? நற்செய்தியின் உண்மை சாரம் உணர்வோம், அன்பை கொண்டாடுவோம், அன்பில் ஒன்றாகுவோம்!

No comments: