Monday, October 8, 2018

செவி கொடு... உணர்ந்திடு... புகழ்ந்திடு

அக்டோபர் 9, 2018: கலா 1:13-24; லூக் 10:38-42

இன்றைய இறைவார்த்தை இறைவனுக்கு செவிமடுக்கும் திறனை முன்னிறுத்துகிறது. சவுல் பவுலான கதை நமக்கு தெறியும், அதில் வெளிப்படும் பவுலடிகளாரின் முதன்மையான திறன், அவர் கடவுளின் குரலுக்கு செவிசாய்த்ததே ஆகும். அவருக்கே உரிய தற்புகழ்ச்சியோடும், இறுக்கமான சிந்தனைகளோடும் இருந்திருந்தால் அவர் இறைவனின் மாபெரும் அப்போஸ்தலராய் உருவாகியே இருக்கமுடியாது என்பது தான் எதார்த்தம். தான் அப்போஸ்தலனாய் உருவானதன் வரலாற்றை கூறும் அவரே அதில் பெரும் பங்கை தான் இறைவனுக்கு செவிகொடுக்க முன்வந்ததற்கே அளிப்பது இந்த ஆழமான உண்மையை நாம் உணர செய்கிறது. 

பெத்தானியாவை சார்ந்த மரியாவும் செவிகொடுப்பதில் நமக்கு மேலுமொரு முன்னோடியாய் தரப்படுகிறார். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமன்றோ உள்ளன என்று பேதுரு கூறியது போல, அந்த வாழ்வு தரும் வார்த்தைகளுக்கே முதல் இடம் கொடுத்து அனைத்தையும் விட்டுவிட தயாராய் இருக்கும் மரியா நாம் நமது உள்ளத்தில் முன்னெடுக்க வேண்டிய மாற்றத்தை நமக்கு குறித்து காட்டுகிறார். 

இவர்கள் அனைவருக்கும், உள்ள முன்னோடிகள் அனைவருக்கும் முத்தாய்ப்பாய் விளங்குபவர் அன்னை மரியாள். இவரை விட இறைவார்த்தைக்கு செவிமடுத்து அதன்படி வாழ முன்வந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. நிகழ்ந்தவை அனைத்தையும் தன் மனதில் நிறுத்தி தியானித்து வந்தாள், என்று நற்செய்தி நமக்கு குறித்துக்காட்டுகிறது. கடந்த ஞாயிறன்று இவ்வன்னையை செபமாலையின் அன்னை என நாம் நினைவு கூர்ந்தோம். செபமாலை என்பது இறைவனுக்கு செவிகொடுக்க மாபெரும் துணையாகும். கபிரியேல் தூதர் மரியன்னைக்கு இறைவார்த்தையை அறிவித்தது முதல் மரியன்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாய் முடிசூட்டப்பட்டது வரை நாம் செபமாலையில் தியானிக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இறைவனின் திட்டம் மனித வரலாற்றில் எவ்வாறு படிப்படியாய் வெளிப்பட்டது என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. இந்நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் விவிலியத்தில் சான்று தேட முடியாது எனினும், உள்ளத்தின் ஆழத்தில் இவற்றை தியானிக்கும் போது இறைவனின் மீட்பு திட்டம் தொடர்ந்து வெளிப்படுவதை நம்மால் உணரமுடிகிறது. 

நம் வாழ்வில் இன்றும் இறைவனின் திட்டம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி அமைதியில், உள்ளத்தின் ஆழத்தில், இறைவனுக்கு செவிகொடுக்க நாம் முன் வந்தால், இதை உணரமுடியும், இறைவனை புகழ தூண்டும். 

No comments: